மேலும் அறிய
ராமநாதபுரம் உத்தரகோசமங்கை கோயில்: கடற்கரைப் பாறை கட்டடக்கலை மாணவர்களை வியக்க வைத்தது!
கடற்கரைப் பாறைகளில் குடைவரைக் கோயில் போல நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள உத்தரகோசமங்கை கோயிலின் கட்டடக்கலை அமைப்பைப் பார்த்து பல்கலைக் கழக மாணவர்கள் வியந்தனர்.

உத்தரகோசமங்கை கோயில்
Source : whatsapp
குடைவரைக் கோயில் போல கட்டப்பட்ட உத்தரகோசமங்கை கோயிலைப் பார்த்து வியந்த பல்கலைக் கழக மாணவர்கள்
தொல்லியல் சிறப்பை அறிய களப்பயணம்
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொல்லியல் துறை மாணவர்கள், துறைத் தலைவர் பேராசிரியர் சுதாகர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தொல்லியல் சிறப்பை அறிய களப்பயணமாக வந்தனர். மாவட்டத்தின் தொன்மைச் சிறப்பை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு எடுத்துக் கூறினார். அவர் கூறியதாவது, பழைய கற்காலம் முதல் தொடர்ந்து வரும் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்தும் தொல்லியல், பண்பாட்டுச் சான்றுகள் அதிகம் கொண்டதாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்கிறது. குறிஞ்சி தவிர்த்த நால்வகை நிலங்கள் இங்கு உள்ளன.
இனப்பெருக்கம் செய்ய இங்குள்ள கண்மாய்களைத் தேடி உலகம் முழுவதும் உள்ள பறவைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக வருகின்றன. வறண்ட பகுதிகளாக அறியப்படும் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரியதும் அதிக வாழ்நாளைக் கொண்டதுமான பொந்தன்புளி மரங்கள் இம்மாவட்டத்தின் பல ஊர்களில் வளர்ந்து வருகின்றன.
குண்டாற்றுப் பகுதியில் கீழைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி
குண்டாற்றுப் பகுதியில் கீழைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி, 20க்கும் மேற்பட்ட ஊர்களில் நுண்கற்காலக் கருவிகள், இரு ஊர்களில் புதிய கற்கால சிறிய கைக்கோடரிகள், 70க்கும் மேற்பட்ட ஊர்களில் இரும்புக் கால தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைகை நதியை அடிப்படையாக வைத்து மழைக்காலத்தில் பெய்யும் நீரை முழுமையாக தேக்கிவைக்க பாண்டியர் அமைத்த சங்கிலித் தொடர் கண்மாய்களை சேதுபதிகள் தொடர்ந்து பராமரித்து மேம்படுத்தினர். எழுத்துகளின்றி முத்திரைப் பொறிப்புடன் காணப்படும் மிகப் பழமையான முத்திரைக்காசுகள் ராமநாதபுரத்தில் கிடைத்துள்ளன. அகழாய்வுகளில் பெரியபட்டினத்தில் சங்ககால சேரர், பாண்டியர் காசுகளும், அழகன்குளத்தில் ரோமானியர் காசுகள், சங்ககால பாண்டியர் காசும் கிடைத்துள்ளன.
பெருவழிகளில் பல சாலைகள் சந்திக்கும் ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
தேவாரப்பாடல் பெற்ற ராமேஸ்வரமும், திருவாடானையும் இலக்கியச் சான்று அடிப்படையில் கி.பி.7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கருவறையைச் சுற்றிவர அமைக்கப்படும் சுற்றுப்பாதையை சாந்தாரம் என்பர். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுர கோயில்களில் இந்த அமைப்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் 3 கோயில்கள், சாயல்குடி, உத்தரகோசமங்கை கோயில்களிலும் சாந்தார அமைப்பு உள்ளது. விமானம் ஒரே ஒரு தளத்துடன் அமைந்தது மாரியூர் கோயில். மாவட்டத்தில் உள்ள திருமால் கோயில்களில் பெரியது திருப்புல்லாணி கோயில். இங்குதான் மாவட்டத்தில் அதிக கல்வெட்டுகள் உள்ளன. கோயில்கள் பெரும்பாலும் கடற்கரைப் பாறைக் கற்களைக் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைகளில் துறைமுக நகரமாக உள்ள ஊர்களிலும், வணிகப் பெருவழிகளில் பல சாலைகள் சந்திக்கும் ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
முற்காலப் பாண்டியர்களால் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரேயொரு மாடக்கோயில்
உயரமான அடித்தளத்துடன் மாடி போன்ற அமைப்பில் கட்டப்பட்டவை மாடக் கோயில்கள் எனப்படும். முற்காலப் பாண்டியர்களால் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரேயொரு மாடக்கோயில் உத்தரகோசமங்கை உமா மகேஸ்வரர் சன்னதி ஆகும். இங்கு உமா, மகேஸ்வரராக சிவன், பார்வதி அமர்ந்தநிலையில் காட்சி தருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். கடற்கரைப் பாறைகளில் குடைவரைக் கோயில் போலக் கட்டப்பட்டுள்ள உமா மகேஸ்வரர் சன்னதியின் கட்டடக்கலைச் சிறப்பைக் கண்டு மாணவர்கள் வியந்தனர். பின்னர் திருப்புல்லாணி கோயில், அரண்மனை, உப்பங்கழி, ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை ஆகியவற்றை பார்வையிட்டனர். பேராசிரியர்கள் முருகன், சந்தியா, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் வே.சிவரஞ்சனி ஆகியோருடன், 27 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















