தேனி: கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேர் கைது; 10 பேர் மீது குண்டர் சட்டம்
கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல், கனிமவள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல் துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கஞ்சா விற்றவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர். அதன்படி கடந்த 6 மாத காலத்தில் கஞ்சா விற்ற 36 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்