H.Raja: "இனி நான் சும்மா விடப்போவதில்லை" : கைதான ஹெச்.ராஜா போலீசிடம் வாக்குவாதம்
பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு சென்ற பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர், ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இந்த நிலையில் காவல்துறை மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்க்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை, நிகழ்ச்சி இரவு நேரம் நடப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை. பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்க வில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது.
மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30)2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாக கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடந்தவந்துகொண்டிருந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் போலீசாருடன் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை அணிந்திருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் ஏராளமானேர் சத்திரப்பட்டியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கைதான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-
தான் இந்து மதத்தில் பிறந்தது தவறா? என்றும், இந்து மதத்தில் மலைகளையும் ஆறுகளையும் குளங்களையும் வழிபட சொல்லி இருக்கிறது. அதற்காக பழனி வந்த தன்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை நான் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசார் தன்னை கைது செய்துள்ளனர் என்றும், ஆனாலும் நான் இதை சும்மா விட போவதில்லை என்றும், இந்துக்களுக்கான நீதியை கண்டிப்பாக பெற்றுத் தருவேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஹெச்.ராஜா கைது செய்ததை அறிந்த பாஜகவினர் ஏராளமானோர் சத்திரப்பட்டியில் குவிந்தனர்.மேலும் அவரை வெளியே விட வலியுறுத்தி பழனி-திண்டுக்கல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஹெச்.ராஜா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் பழனிக்கு புறப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்