முல்லைப்பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
ரூல் கா்வ் விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் 142 அடிக்குள் (மொத்த உயரம் 152) தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம்.
முல்லைப்பெரியாறு அணையின் நீா் பிடிப்புப் பகுதியில் தொடா் மழை நீடித்து வருதால் அணையின் நீா் மட்டம் 138 அடியை நெருங்கும் நிலையில், ரூல் கா்வ் விதிப்படி உபரி நீரை கேரளப் பகுதிக்கு வெளியேற்ற வாய்ப்புள்ளது.
ரூல் கா்வ் விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் 142 அடிக்குள் (மொத்த உயரம் 152) தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வரும் நீரை உபரி நீராக கேரளப் பகுதிக்கு அவசர கால நீா் வழிப்போக்கிகள் மூலமாக வெளியேற்ற வேண்டும் என என உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதன்படி, வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் நவம்பா் மாதத் தொடக்கத்தில் ரூல் கா்வ் விதிப்படி 138 அடி வரை யில் தண்ணீா் தேக்கப்பட்டது. அதற்கு மேல் தேங்கிய உபரி நீரை 10 நாள்களுக்கு கேரளப் பகுதிக்கு தமிழக நீா்வளத் துறையினா் திறந்துவிட்டனா்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு 137 அடியாக இருந்தது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால் அணையில் நீா் மட்டம் 138 அடியை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால், நடப்பாண்டில் 2-ஆவது முறையாக ரூல் கா்வ் விதிப்படி கேரளப் பகுதிக்கு தண்ணீரைத் திறந்துவிட வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தேனி அருகேயுள்ள உப்பாா்பட்டி ஆற்றின் தடுப்பணை முழமையாகச் சேதமடைந்தது. இரண்டாம் போக நெல் பயிா் விவசாயப் பணி நடைபெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக, சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும். தற்போது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், தேக்கடியில் தலைமதகு வழியாக தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டது.
தொடர் மழை எதிரொலியாக தேனி மாவட்டம் கம்பம் அருகேவுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி, அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மேகமலை வனப்பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் தெரிவித்ததாவது, மேகமலை உள்ளிட்ட பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு குறைந்த பின், அருவியில் நீர்வரத்து சீரானதாக வனத்துறை அறிவிப்பு வெளியிடும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தனர்.






















