ஒற்றைத்தலைமை என்பது தொண்டர்களின் கருத்து - ராஜன் செல்லப்பா அதிரடி
ஒற்றைத்தலைமை என்பது தொண்டர்களின் கருத்து - பாஜக குறித்து பேச தயாரில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..
மதுரை அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் கட்சி கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்மேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு கட்சியினரிடையே பேசினார்.
அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசுகையில், அதிமுகவினருக்கு மனது தைரியம் உள்ளது. எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் ஆளுகிற சக்தியாக மக்கள் மனதில் அதிமுக உள்ளது. திமுக ஆட்சி இருந்தாலும் மக்கள் அதிமுகவை விரும்புவதை உணர முடிகிறது. திமுக திட்டங்கள் கூண்டுக்குள் சிக்கி கொண்டு தவிக்கிறது. திமுக சொன்ன வாக்குறுதிகள் திட்டங்கள் எதையுமே நிறைவேற்றவில்லை. நேற்று அதிமுக தலைமைக்கழகத்தில் மிகச்சிறந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர்.பொதுக்குழுவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிச்செயலாளர்கள் வழக்கமாக பங்கேற்பார்கள்.இந்த ஆண்டு தேர்தல் ஆணைய சட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் வரும் 23ம் தேதி பொதுக்குழுவில் முக்கிய நிவாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
அதிமுக தேர்தல் சட்ட விதியின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுக்குழுவில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வதாக தலைமை கூறியுள்ளது. வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம், மீண்டும் ஆட்சியை பிடிப்போமா என எண்ண வேண்டாம். ஜெயலலிதாவின் பெண்கள் நலத்திட்டங்களை நிறுத்தி பெண்களின் வெறுப்பை திமுக சம்பாதித்துவிட்டனர். வீடு தேடி மருத்துவம் மற்ற அதிமுக திட்டங்கள் குறித்து புள்ளி விவரங்களை தவறாக கொடுக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது.அதிமுக திட்டங்களை திமுக குளோஸ் செய்துவிட்டனர்.திமுக எந்த திட்டங்களையும் செய்யவில்லை. கருணாநிதி சிலையையும், மணிமண்டபமும் மட்டுமே கட்ட திட்டமிடுகின்றனர்.
கருணாநிதி பெயரில் புத்தகம் வைப்பதற்காக ஒரு கட்டிடத்தை ஸ்டாலின் கட்டி வருகிறார்.அறநிலையத்துறைக்கு திருக்கோவில் சேமிப்பு பணத்தை செலவு செய்கிறார்களே தவிர 10 சதவீதம் கூட அரசாங்க நிதியை செலவு செய்யவில்லை. ஒய்வூதிய திட்டம், வேலைவாய்ப்பு எதையாவது கொடுத்தார்களா? ஆனால் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்.ஒரு வருடத்தில் கெட்ட பெயர் மக்களிடத்தில் வாங்கிய அரசு திமுக.தினந்தோறும் 5 கொலைகள் என சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டது. தினந்தோறும் நடப்பது ஒரு கொலையல்ல. இரட்டைக்கொலை தான் நடக்கிறது.
ஒரு நற்பெயரும் திமுகவுக்கு கிடைக்கவில்லை. தினந்தோறும் திமுகவுக்கு அறிக்கைகள் குற்றச்சாட்டுக்கள் மூலம் சாட்டையடி கொடுக்கிறார் எடப்பாடி.சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக மக்களே சொல்ல தொடங்கி விட்டனர். திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஒன்றிய அரசு எனச்சொன்னார்களா? தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் உணர்வுகளை தட்டி பறித்து ஏமாற்றுவதற்காக ஒன்றிய அரசு மாநில சுயாட்சி எனச்சொல்லி தப்பித்துக்கொள்ள பேசி வருகின்றனர். அந்தரத்தில் திமுக தொங்கி கொண்டுள்ளது. திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை, நிதியை பெற முடியவில்லை,
ஆளுநரோடு சண்டை என விழி பிதுங்கி கொண்டுள்ளனர்.திமுகவை வீழ்த்துவது என்பது அதிமுகவுக்கு சாதாரணம். பொதுக்குழுவுக்கு பின்பு நீங்களும், மக்களும் கொடுக்கும் செயல்வடிவம் கட்சியை இராணுவக்கட்டுப்பாடு செயல்பட வைக்கும். இராணுவ கட்டுப்பாடோடு அதிமுக செயல்பட வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூடுகிறது என பேசினார். அதனைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், அதிமுக என்றாலே ராணுவக்கட்டுப்பாடு. நேற்று கட்சி அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறந்த ஆட்சியை வழங்கினார். ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக கட்சியை வழிநடத்தினார்.பொதுக்குழுவில் எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தொண்டர்கள் அதற்கு கட்டுப்படுவார்கள்.ஒற்றைத்தலைமை குறித்து தனிப்பட்ட கருத்தை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சொல்லவில்லை.
தொண்டர்களின் மக்களின் கருத்தை தலைமைக்கு சொல்லி உள்ளோம். தலைமையில் இருந்து தொண்டன் வரை பொதுக்குழு தீர்மானத்தையே பின்பற்றுவோம். அதிமுக இயக்கத்தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருப்பார்கள். பாஜக தீவிர எதிர்க்கட்சியாக இருப்பதால் ஒற்றைத்தலைமை பேசப்படுகிறதா என்ற கேள்விக்கு,அதற்கும் இதற்கும் சப்பந்தம் கிடையாது. பாஜகவையோ கூட்டணியையோ விமர்சிக்க தயாரில்லை. ஒற்றைத்தலைமை என்ற விவாதம் நீண்ட நாட்களாக உள்ளது. நல்லநோக்கத்தில் ஒற்றைத்தலைமை வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னேன். ஒற்றைத்தலைமை குறித்து தலைமையே முடிவெடுக்கும். சசிகலா கட்சியினரோ ஆதரவாளர்களோ யாரும் வரவில்லை. உட்காரும் நடைமுறையை வரைமுறை படுத்தவே அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது என பேசினார்.