அதிகரித்து வரும் புற்றுநோய்.. காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்து அளவு குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை
அதிகரித்து வரும் புற்றுநோயை தடுக்க கேரள மாநிலத்தை போன்று காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்தின் அளவு குறித்த ஆய்வு செய்ய கோரிக்கை.
வருடத்திற்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், PH factor நுகர்வோரின் கையில் இல்லாத நிலையில் மின் கணக்கீட்டு இயந்திரத்தை ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் உள்ள நுகர்வோர் கூட்டமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் நுகர்வோராக உள்ள பொதுமக்களுக்கு அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நுகர்வோர் பாதுகாப்புத் தினமான டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து நகர் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது, தமிழக அரசின் கீழ் உள்ள 18 துறைகளில் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் குறித்து தெரிந்துகொள்ளும் அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் குறிப்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடும் விதமாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1. தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் எந்த அளவிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு நுகர்வோரின் கைக்கு வருகிறது என்பது குறித்த ஆய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாத நிலையில் கேரள மாநிலத்தை போன்று தமிழகத்திலும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அளவு ஆய்வு செய்ய வேண்டும்.
2. தமிழகத்தில் ஏற்கனவே 100 சதவீதம் அளவிற்கு சொத்து வரியை உயர்த்தி விட்டு ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு என்பது அனைவரையும் பாதிக்கும் விதமாக உள்ளதால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
3. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்களை அளவீடு செய்யும் தராசு உள்ளிட்ட இயந்திரங்களை ஆண்டுதோறும் அரசு ஆய்வு செய்வது போல் மின்வாரியத்தில் PH factor என்பது நுகர்வோரின் கையில் இல்லாத நிலையில் மின் கணக்கீட்டு இயந்திரத்தை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டம் தேனி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் இரு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.