Madurai High court: குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு ஜாமீன் தள்ளுபடி
ஜாமீன் வழங்கினால் குற்றவாளிகள் தலைமறைவாகவும், சாட்சிகளை அழிக்கவும் வாய்ப்புள்ளது எனக்கூறி இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற வழக்கில், முத்துச்செல்வி, கார்த்திகேயன் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற வழக்கில் கார்த்திகேயன், முத்துச்செல்வி ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "கடந்த ஜூன் 19ஆம் தேதி தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தனது 6 மாத குழந்தையை காணவில்லை என தாயார் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முத்துச்செல்வி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரர்களின் ஜாமீன் மனுவை நெல்லை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட சிடி ஆவணத்தின் அடிப்படையில் கனி என்பவர் முத்துச்செல்வி, கார்த்திகேயன் ஆகிய இருவருடனும் கூட்டுசேர்ந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டதும், அதனடிப்படையில் குழந்தையை கடத்தியதும் தெரியவருகிறது. வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருக்கும் நிலையில் ஜாமீன் வழங்குவது ஏற்கத்தக்கதாக அமையாது. ஜாமீன் வழங்கினால் குற்றவாளிகள் தலைமறைவாகவும், சாட்சிகளை அழிக்கவும் வாய்ப்புள்ளது எனக்கூறி இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழ்வாராய்ச்சி நடத்தி, உழக்குடி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கில், அரசின் அறிக்கை ஏற்ற நீதிபதிகள் ஆய்வின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் உள்ள பகுதியை சுற்றியுள்ள இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யவும் மேலும் அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில், "தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியும் இடம்பெற்றுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், " மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில் ஏற்கனவே தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பாதுகாக்கப்படும் அளவிற்கு எந்த விதமான பொருளும் இல்லை இந்தப் பகுதி ஏற்கனவே சேதம் ஆகிவிட்டது" என்று தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து நீதிபதி, "தமிழகத் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதி உட்பட பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தி அதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்