மேலும் அறிய
Advertisement
அன்னவாசல், திசையன்விளை அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அன்னவாசல் மற்றும் திசையன்விளை அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
திசையன்விளை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார் மற்றும் தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிலிருந்து 9 பேர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ச் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த ஒருவர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதே நேரத்தில் திமுகவை சேர்ந்த 2 பேர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸில் 2 கவுன்சிலர்களும், திமுகவில் இணைந்த அதிமுகவைச் சேர்ந்த 1 கவுன்சிலரும்,
சுயேச்சை 3 கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த நிலையில் நாளை 2022 மார்ச் 4-ஆம் தேதி திசையன்விளை பேரூராட்சி சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவிக்கான போட்டி நடைபெற உள்ளது. மொத்தமாக 18 வார்டுகளில் 10 வார்டுகள் அதிமுக வசம் இருப்பதால் திமுகவினர் சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவியை கைப்பற்றுவதற்காக, வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, திசையன்விளை பேரூராட்சி சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவிக்கான தேர்தல் அமைதியான முறையில் நடத்த தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்." என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "அதிமுக கவுன்சிலர்கள் 9 நபருக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கி அமைதியான முறையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
*********
புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியை சேர்ந்த சாலை பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலிதேவி, சாலை மதுரம், குமார், அனுஷியா, விஜயசாந்தி, தங்கராஜ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தற்போது முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நபர்களில் ஒன்பது கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க.வினரே பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிற கட்சியினை சேர்ந்தவர்கள் கூறும் நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டுமென மிரட்டல்கள் வருகின்றன.
மார்ச் 4ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் மிரட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. முறையான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே பேருராட்சி தலைவர் தேர்தல் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் விருப்பப்படி வாக்களிக்க இயலும். ஆகவே அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். அன்னவாசல் காவல் ஆய்வாளர் எங்களை தொல்லை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த வழக்கில், காவல்துறை பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாற்றுக்கட்சியினர் தொடர்ச்சியாக எங்களை மிரட்டி வருகின்றனர். ஆகவே அன்னவாசல் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலை உயர் அதிகாரி ஒருவர் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 9 கவுன்சிலர்களுக்கும், நாளை தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்யும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், அன்னவாசல் பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் தேர்தலை புதுக்கோட்டை காவல்கண்காணிப்பாளர் கண்காணித்து, அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டார்.
*******
மதுரையைச் சேர்ந்த பசும்பொன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை, திருப்பரங்குன்றம் தாலூகாவில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் பாண்டிய மன்னர் காலத்தில் அமைந்த மதுரையின் மிகவும் பழமைவாய்ந்த கண்மாய் ஆகும். இந்த கண்மாயை பிரதானமாக கொண்டு நிலையூர் மற்றும் கூத்தயார்குண்டு பகுதியில் பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் ஆகாரமாகவும் காணப்படுகின்றது.
ஆனால், தற்போது இந்த நிலையூர் கண்மாயை அரசு மீன் பிடி குத்தகைக்கு விட அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கண்மாயில் மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுக்கும் நபர்கள் சட்டவிரோதமாக தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு திறந்து விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் சேதமடைந்து நிலையூர் பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் பறவைகளை விரட்டுவதற்கு வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கண்மாய் தண்ணீர் மாசு அடைகிறது, சட்டவிரோதமாக தண்ணீர் திறந்து விடுவதால் கண்மாய் மதகுகளும் பாதிக்கப்படுகிறது. வியசாயத்திற்கு தேவைப்படும் நேரம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் மீன் பிடி குத்தகையை ரத்து செய்தும், மீன்பிடிப்பதற்காக குத்தகைதாரர்கள் கண்மாயின் தண்ணீரை சட்டவிரோதமாக திறந்து விடுவதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
மேலும், நிலையூர் கண்மாயிலிருந்து தண்ணீரை திறந்து விவசாய நிலங்கள் சேதம் அடைவதை தடுக்கவும், நிலையூர் கண்மாயில் தண்ணீரை சேமித்து வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "மீன்வளத்துறை இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்மாயில் தண்ணீர் திறப்பதால் ஏற்படும் விவசாய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து 1 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் மீன்வளத்துறை இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நிலையூர் கண்மாயில் தண்ணீரை சேமிப்பது, மீன்பிடி குத்தகைக்கு விட தடைவிதிப்பது குறித்து புதிய மனு அளிக்க வேண்டும். மனுவினை அதிகாரிகள் பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
******
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம் பட்டாசு, தீப்பெட்டி, நாட்குறிப்பேடு, பிரிண்டிங் வேலைகள் போன்றவற்றிற்கு பெயர் பெற்ற மாவட்டம். 1500 பட்டாசு ஆலைகளுக்கும் அதிகமான அளவில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் உள்ளன. பெருமளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் இந்த பட்டாசு ஆலைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் முறையான அனுமதியும், உரிமமும் பெற்ற பின்னரே பட்டாசு ஆலையை தொடங்க வேண்டும். பட்டாசு ஆலையில் பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. 2012 முதல் கடந்த டிசம்பர் வரை 9 பெரும் விபத்துக்கள் நடைபெற்றதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். விதிகள் முறையாக பின்பற்றப்படாததால், அப்பாவி தொழிலாளர்களே தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆகவே ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் வேறு உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை" என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
*******
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion