ஆன்லைன் மோசடி வழக்கை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு
ஆன்லைன் மோசடி என தெரிந்ததும் தனியார் வங்கியை தொடர்பு கொண்டு புகார் செய்ததால் நான் அனுப்பிய தொகையை எதிர் தரப்பினர் எடுக்க முடியாதபடி வங்கியில் பிடித்து வைத்து கொண்டனர் என மனுதாரர் தரப்பில் தகவல்

கடந்த 2012-ம் ஆண்டு 4 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடியில் இழந்த 8 லட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபாயை வங்கியாளர்கள் திரும்பி தர கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யும்படியும் வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் பீட்டர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2012-ம் ஆண்டு எனக்கு இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்திருப்பதாக என்னுடைய மெயிலில் தகவல் வந்தது. பரிசுத்தொகைக்கு உரிய வரித்தொகையை செலுத்திய உடன், பரிசுத்தொகை என்னுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதை நம்பிய நான், அவர்கள் கொடுத்த 9 வங்கிக்கணக்குகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்து 900-ஐ செலுத்தினேன். அதன்பின் என்னிடம் பேசிய செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.
அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும், முடியவில்லை. இதுபற்றி விசாரித்ததில், இது ஒரு ஆன்லைன் மோசடி என தெரிந்தது. உடனடியாக தனியார் வங்கியை தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அதன்பேரில் நான் அனுப்பிய தொகையை எதிர் தரப்பினர் எடுக்க முடியாதபடி பிடித்து வைத்துக்கொண்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தற்போது வரை இந்த தொகையை நான் பெறுவதற்காக போராடி வருகிறேன். ஆனாலும் போலீசாரும், வங்கி தரப்பிலும் அலைக்கழிக்கின்றனர். எனவே வங்கியில் செலுத்திய தொகையை ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் மாதம் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

