போலீஸ் பாதுகாப்பு கேட்கும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி
கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது - நீதிபதி
குருசாமி மீது தற்போது உள்ள வழக்குகளின் நிலை என்ன? தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’மதுரை மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்று உள்ளது. என்மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையின் போது மட்டும் ஆஜராகி விட்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்றிருந்தேன். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பல லட்ச ரூபாய் செலவழித்து தற்போது உயிர் பிழைத்துள்ளேன். பல தரப்பிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.கே.குருசாமி மீது பலமுறை கொலைமுயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரது உயிருக்கு உடனடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது என வாதிட்டனர். இதனை பதிவு செய்த நீதிபதி, கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. மனுதாரர் மீது தற்போது உள்ள வழக்குகளின் நிலை என்ன? மனு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு