High Court Order: அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
மதுரையைச் சேர்ந்த பிரபாகரன், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாக போதை தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பிரபாகரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி, இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். மீண்டும் பிரபாகரன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு தள்ளுபடி ஆனதால், மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பழைய விவரங்களை மறைத்து புதிதாக மனு தாக்கல் செய்வது போல் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
மீண்டும் பட்டியல்:
இந்த விவகாரம் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் நீதிபதி புகழேந்திக்கு தெரிவிக்கப்பட்டு, பிரபாகரனின் வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பாக மீண்டும் பட்டியலிடப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி, நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, "கீழமை நீதிமன்றங்கள் விசாரணை செய்யும் வழக்குகளின் உத்தரவுகளை முறையாக நீதிமன்ற வலைதளங்களில் (ecourts.gov.in) பதிவிடுவதில்லை. நீதிமன்ற வலைதளங்களை சோதித்த போது பெரும்பான்மையான நீதிமன்றங்கள், வலைதளங்களை பயன்படுத்தப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.
பதிவேற்றம் செய்ய வேண்டும்:
அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும், தினந்தோறும் நடைபெறக்கூடிய அனைத்து வழக்குகளின் நிலைமைகளை நீதிமன்ற வலைதளமான ecourts.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஜாமனீன் மனுக்கள், முன் ஜாமீன் மனுக்கள் மற்றும் தீர்ப்புகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தந்து உதவிய அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் நீதிமன்றம் பாராட்டை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்