திண்டுக்கல்லில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல் - நடந்தது என்ன?
வேட்பாளர் அறிமுக கூட்டம் உட்கட்சி கோஷ்டிபூசல் மோதல் தேர்தல் தொடர்பான முதல் கூட்டத்திலேயே அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டனர்.
பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிபூசல் மோதலால், தேர்தல் தொடர்பான முதல் கூட்டத்திலேயே அமைச்சர்கள் சக்கரபாணி ,ஐ.பெரியசாமி ,வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேட்பாளர் அறிமுக கூட்டம்:
2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன. இதன்படி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பழனியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும், அனைத்து கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக அமைச்சர்கள்:
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குறித்து கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டணி கட்சியினர் பங்கேற்பு :
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வந்தபோது காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத்தலைவர் மாரிக்கண்ணு என்பவர் பேசியபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி முத்துவிஜயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பத்மினி முருகானந்தம், மகாலட்சுமி மாசிலாமணி ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். மேடைக்கு முன்பாக குவிந்த அவர்கள் மாணிக்கண்ணுவை பேச அனுமதிக்க கூடாது என்று கோஷமிட்டனர். தகராறில் ஈடுபட்டவர்களை மேடையில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் சமாதானம் ஆகாமல் தகராறு முற்றியதை அடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் நிகழ்ச்சியை புறக்கணித்து மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
உட்கட்சி பிரச்னை தகாராறு :
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலால் வேட்பாளர் சச்சிதானந்தம் மற்றும் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவராக உள்ள சதீஷ் என்பவர் இரண்டு ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளார். பழனி நகரதலைவராக மாநில தலைமையால் நியமிக்கப்பட்டு முத்துவிஜயன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக, கட்சிக்கு சம்பந்தமில்லாத மாரிக்கண்ணு என்பவரை பழனி நகர தலைவராக வாய்மொழியாக அறிவித்தார். இதனை கண்டித்தும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாரிக்கண்ணுவை மேடை ஏற்றியதை கண்டித்தும் நாங்கள் கூட்டத்தை விட்டு வெளியேறியதாகவும், மாவட்டத் தலைவர் சதீஷின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றுவதில் காங்கிரஸ் கட்சியினர் தொய்வடைந்து உள்ளனர்.