கொடைக்கானலில் ஊர் முதலாளியாக பட்டம் சூட்டப்பட்ட 27 வயது இளைஞர்
’’பூம்பாறை கிராமத்தில் மண்ணாடியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஊர் முதலாளி பட்டம் சூட்டப்படுவது வழக்கம்’’
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் முதன் முதலாக குடியேறிய மண்ணாடியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பூர்வகுடிகளாகவும் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் மண்ணாடியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பட்டம் சூட்டி வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் பூம்பாறை கிராமத்தில் சந்திர சேகர் என்பவர் வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டத்துடன் வாழ்ந்து வந்தார்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இறந்ததன் காரணமாக இவரது மகனான 27 வயது இளைஞர் செல்வேந்திரன் என்பவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றாக சேர்ந்து வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டினர். இவர்களின் குடும்பத்தில் இருந்து 7ஆவது தலைமுறையாக ஒருவருக்கு இப்பட்டம் சூட்டப்படுகிறது. மேலும் இவ்விழாவில் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க இவருக்கு பட்டு சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊரின் மைய பகுதியில் உள்ள மந்தையில் வைத்து மகுடம் சூட்டி இன்று முதல் இவர் இறக்கும் வரை இந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து சமுதாய சுபகாரியங்களுக்கும், ஊர் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன் நின்று நடத்துவார் என்றும், கிராமத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவரது ஆலோசனை பெற்ற பிறகே நடைபெறும் என இந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ்விழாவில் கொடைக்கானலை சுற்றியுள்ள கிளாவரை, வில்பட்டி, தாண்டிக்குடி, குண்டுபட்டி, வடகவுஞ்சி, போளூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் இருந்து அனைத்து பட்டக்காரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டம் சூட்டப்பட்ட இளைஞருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்தும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. கொடைக்கானல் மலைகிராமங்களில் முதன் முறையாக திருமணம் நடைபெறாத 27 வயதான இளைஞருக்கு வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டப்பட்டது இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்