Kamuthi Birthday: 70வது பிறந்தநாளில் 70 வகை உணவு சமைத்து முதியவருக்கு ‛சர்பிரைஸ்’ கொடுத்த குடும்பம்!
கமுதியில் பெரிய மால்கள் இல்லை, பிரமாண்ட ஷாப்பிங் சென்டர்கள் இல்லை. ஆனால் அது மட்டுமே சர்பிரைஸ் தந்துவிடாது.
பிறந்த நாள் பரிசை வெறுமனே வழங்குவதை விட அதில் ஆச்சர்யம் கலந்து தருவதில் தான் தனி ‛கிக்’ என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியும். வானில் பறந்து கேக் வெட்டுவது, நீரில் மிதந்து கேக் வெட்டுவது என எத்தனையோ வித்தியாசமான பிறந்தநாட்களையும், வித்தியாசமான பிறந்த நாள் பரிசுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். இதுவும் ஒரு வித்தியாசமான பரிசு தான், ஆனால் அதிலும் ருசியான பரிசு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக் கடை அதிபர் கணேசன். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார். இன்று அவருக்கு 70வது பிறந்த நாள் . வழக்கம் போல, இறை வழிபாடு, பிள்ளைகள் ஆசி, மனைவியின் உபசரிப்பு என்று தான் அவருக்கு இன்றைய பிறந்தநாள் கடந்திருக்கும். எல்லாம் முடித்த பின், டைனிங் டேபிளில் சாப்பிட வந்தவருக்கு, அதன் பிறகு தான் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. மேஜை நிறைய பதார்த்தங்களும், அவை ஒவ்வொன்றிலும் எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக அதிகமாக சாப்பிட்டாலும் நாம் திக்குமுக்காடி போவோம், மனிதருக்கு அளவுக்கு அதிகமான உணவை பார்த்ததிலேயே திக்குமுக்காடி விட்டார். கணேசனின் 70வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், 70 வகையான உணவுகளை சமைத்திருந்தார்கள் அவரது குடும்பத்தினர். மனைவி, மருமகள் உள்ளிட்ட குடும்பத்தார் இணைந்து சர்பிரைஸ் முயற்சியாக அதை தயார் செய்து, கணேசனை அசத்திவிட்டனர். கணேசன் ஒரு சைவ உணவுப்பிரியர். அதனால் அத்தனையும் சைவ வகை. ஒன்று, இரண்டு என்றால் பரவாயில்லை. அட.... 10, 20 என்றால் கூட பரவாயில்லை. 70 வகை உணவென்றால் சும்மாவா? அதுவும் வீட்டிலேயே சமைத்து எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. சர்பிரைஸ் சாப்பாடு வேறு; வாசம் வந்துவிட்டால் ரகசியம் தெரிந்துவிடும். இத்தனையையும் சமாளித்து சமைத்து முடித்திருக்கிறார்கள் கணேசன் வீட்டு பெண்கள்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை பரவலாக மாறி வரும் சூழலில் தமிழ்நாட்டில் கடை கோடியில் உள்ள கமுதியில் உள்ள ஒரு குடும்பத்தில், குடும்பத்தின் மூத்த தலைவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த குடும்பத்தாரின் இந்த முயற்சி பாராட்டை கடந்த நெகிழ்ச்சி. சர்பிரைஸ் கொடுக்கும் அளவிற்கு கமுதியில் பெரிய மால்கள் இல்லை, பிரமாண்ட ஷாப்பிங் சென்டர்கள் இல்லை. ஆனால் அது மட்டுமே சர்பிரைஸ் தந்துவிடாது. பாசமும், நேசமும், நெகிழ்ச்சியும் அணுகுமுறையில் தான் உள்ளது. அது அளிப்பவரையும், ஏற்பவரையும் பொறுத்தது. இப்படி தான் இந்த குடும்பம் நெகிழ்ந்து, நம்மையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தனை உணவையும் அவர் உண்ண முடியாது தான். ஆனால், அவரும் அந்த அன்பை உதாசீனப்படுத்திடவில்லை. அனைத்திலும் சிறிது சிறிது எடுத்து ருசித்து, சமைத்தவர்களின் மனதையும் குளிரச் செய்துள்ளார்.