கள்ளக்குறிச்சி விவகாராம் எதிரொலி; தேனி சர்க்கரை ஆலையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை
தேனியில் தனியார் சக்கரை ஆலையில் அதிரடி சோதனைகள் ஈடுபட்ட மதுவிலக்கு காவல்துறையினர். விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் எத்தனால் அளவு குறித்து அதிரடி சோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து, உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எரிச்சாராயம் விற்பனை, எத்தனால் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவது கள்ளச்சாராயம் விற்பது குறித்து கண்காணிக்க டிஜிபி ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் எதிரொலியால் தேனியில் தனியார் சக்கரை ஆலையில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்ட மதுவிலக்கு காவல்துறையினர், விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் எத்தனால் அளவு குறித்து அதிரடி சோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள சூழலில் விஷசாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும், எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை அடுத்து தேனி மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் தேனி அருகே உள்ள வைகை அணையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சர்க்கரை ஆலையில் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் என்னும் ரசாயன கலவையில் அளவு குறித்தும், அது தனியார் நிறுவனங்களுக்கு எந்த அளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது குறித்தும், தற்போது இருப்பு அளவு குறித்தும் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த சர்க்கரை ஆலை கடந்த ஒரு மாதமாக செயல்படாத நிலையில் தற்போது அதன் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் சர்க்கரை ஆலையில் எத்தனால் அளவு மிகச் சரியாக இருந்ததாக ஆய்வில் ஈடுபட்ட மதுவிலக்குக்கு காவல் துறையினர் தெரிவித்தனர்.