dindigul crime: இன்ஸ்டாகிராம் காதல், படுகொலை! மாமனார் கைது, உறவினர்கள் சாலை மறியல் - கொலையில் மர்மம்?
நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார். உண்மை கொலையாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல்

நிலக்கோட்டை அடுத்த, கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த மருமகனை வெட்டி படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, விராலிப்பட்டி அருகே, ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) பால் கறக்கும் தொழிலாளியான, விருவீடு அருகே கணபதிபட்டியில் வசித்து வரும் சந்திரன் (49) என்பவரின் மகளான, கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் (பி.காம்) இரண்டாம் ஆண்டு படித்து வரும், ஆர்த்தி (21) இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமச்சந்திரன், ஆர்த்தி ஆகிய இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால், மருமகன் ராமச்சந்திரன் என்பவருக்கும், மாமனார் சந்திரன் இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை, குல்லிபட்டி பகுதிக்கு பால் கறக்கும் வேலைக்கு மருமகன் ராமச்சந்திரன் சென்றுள்ளார். அப்போது அவர், நிலக்கோட்டை அருகே கூட்டாத்து அய்யம்பாளையம் பாலத்தின் சென்ற போது, வழிமறித்த மாமனார் சந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மருமகன் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரன், கௌரவ கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் மருமகனை கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாமனார் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்க முடியாது? இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? எனவே, உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள் ராமநாயக்கன்பட்டியில் ஆண்டிபட்டி - வத்தலகுண்டு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காதல் திருமணம் செய்த, மருமகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















