(Source: ECI/ABP News/ABP Majha)
திண்டுக்கல் : இயற்கை தீவன ஆராய்ச்சி.. லாபம் ஈட்டும் பழனியை சேர்ந்த இளம்பெண்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இயற்கை தீவன ஆராய்ச்சியில் இளம்பெண் மென் பொறியாளர் அண்ணபூரணி அசத்தி வருகிறார்
பழனியை சேர்ந்த இளம்பெண் மென்பொறியார் அன்னபூரணி, விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே வீட்டிலிருந்த ஆடு, மாடுகள் மற்றும் விவசாயத்தின் மீது ஆர்வம் உடன் இருந்து வந்துள்ளார். பள்ளியில் நன்றாக படித்ததன் காரணமாக கல்லூரியில் சேர்ந்து மென் பொறியாளர் பட்டப்படிப்பையும், MBA என்ற வணிக மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வேலைவாய்ப்புக்கள் அன்னபூரணிக்கு கிடைத்துள்ளது. இருந்தபோதும் விவசாயம் மற்றும் கால்நடைகள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கிடைத்த வேலைகளை தொடராமல் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த மாடுகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது மாடுகளுக்கு இயற்கையான சத்து உள்ள தீவனம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கம்பு, சோளம் ,அரிசி, கோதுமை உள்ளிட்ட சிறுதானிய மாவு வகைகள், கடலை, துவரை, உளுந்து, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட பொட்டு வகைகள், தவிடு வகைகள் என 13 வகையான உணவுப் பொருட்களை கொண்டு மாடுகளுக்கு சத்தான உணவு கிடைக்கும் வகையில் இயற்கை தீவனம் ஒன்றை தயார் செய்துள்ளார். அதனை தங்கள் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுக்கு கொடுத்தபோது நல்ல பலன் கிடைத்துள்ளது.
மாடுகள் ஆரோக்கியத்துடன், அதிக பாலையும் கொடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தான் உருவாக்கிய இயற்கைத் தீவனத்தால் மாடுகளுக்கு நல்ல பலன் கிடைப்பதை உணர்ந்த அன்னபூரணி அருகில் உள்ள மற்ற விவசாயிகளுக்கும் இந்த தீவனத்தை கொடுத்து சிறிய அளவில் தனது இயற்கை தீவன தொழிலை துவங்கியுள்ளார். வணிக மேலாண்மை படிப்பை முடித்திருந்த அன்னபூரணி தனது இயற்கைத் தீவனம் தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த எண்ணி சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து தமிழகம் முழுவதற்கும் தனது இயற்கை தீவனத்தை அனுப்பி விற்பனை செய்து வருகிறார். தற்போது தனது இயற்கை தீவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் காரணமாக கேரளா, பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களுக்கும் இயற்கை தீவனத்தை அனுப்பி மாதம் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டிக் பழனியில் இளம் பெண் தொழில் அதிபராக வலம் வருகிறார்.
ஏசி அறையில் அமர்ந்துகொண்டு கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும்போது கிடைக்காத மன நிறைவு, தனக்கு பிடித்த விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருவதில் கிடைத்துள்ளதாகவும் , தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் தன்னைபோன்று ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இயற்கை தீவன ஆராய்ச்சியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து அசத்தி வரும் இளம் தொழில் அதிபர் அன்னபூரணிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.