கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்... 5 கி.மீ., தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கொடைக்கானலில் குளுகுளு காலநிலையுடன் சீசன் களைகட்டுவதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. வானுயர்ந்த மலை முகடுகள், இயற்கையழகு, வியூ பாய்ண்ட்கள், சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள், குளுகுளு கால நிலையும் காணப்படுவதால் எப்போது கோடை சீசன் இங்கு களைகட்டும். இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்தே கோடை சீசனை அனுபவிப்பதற்கும், இதமான சூழலை ரசிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வார விடுமுறை நாட்கள் உட்பட சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் உள்ளது. தற்போது கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வருகை அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஓரிரு வாரங்களில் பூங்கா முழுவதும் கோடிக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கவுள்ளன. தற்போது மேரி கோல்ட், பேன்சி , பெட்டூனியா, ஸ்டார் ஃப்ளக்ஸ், ரோஜா மலர்கள் என லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சுற்றி வந்து ரசிக்கின்றனர்.
மேலும் நட்சத்திர ஏரி, தூண் பாறை, மோயர் பாய்ண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி, பைன் காடுகள், கோக்கர்ஸ் வாக் என முக்கியமான சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவர்கள் உற்சாகமாக போட்டோக்கள், செல்பி எடுத்து பொழுதைக் கழித்து வருகின்றனர்.
குறிப்பாக கொடைக்கானலில் கோடை விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பல்வேறு சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரதான சாலைகள் மற்றும் நகரின் உட்புற பகுதிகளில் பல்வேறு உணவு விடுதிகள் தங்கும் விடுதிகளில் முறையான வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் காரணத்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமையாளர்கள் மீதும் தங்கும் விடுதிகளில் முறையான வாகன நிறுத்தம் இல்லாத விடுதி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொடைக்கானல் பிரதான சாலை மற்றும் நகரின் உட்புற சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது.





















