தேனியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..!
தேனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தீடீரென மாலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது.
தேனியில் மழை:
அப்போது மாலை 6 மணிக்கு மேல் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. அதன்பிறகு விடிய, விடிய சாரல் மழை பெய்தது. குறிப்பாக தேனி, ஆண்டிப்பட்டி, வைகை அணை, பெரியகுளம், மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மழை நிலவரம்:
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 59.4 செ.மீ. மழையளவு பதிவானது. இதன் சராசரி மழையளவு 4.6 செ.மீ. ஆகும். மேலும் மாவட்டத்தில் அதிகபட்சமாக வைகை அணை பகுதியில் ஒரேநாளில் 15 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல், ஆண்டிப்பட்டியில் 9.8 செ.மீ., பெரியகுளத்தில் 8 செ.மீ., மஞ்சளாறு அணையில் 8.5 செ.மீ., அரண்மனைப்புதூரில் 2.4 செ.மீ. வீரபாண்டியில் 1.1 செ.மீ., சோத்துப்பாறையில் 6.1 செ.மீ., போடியில் 1.9 செ.மீ., முல்லைப்பெரியாற்றில் 3.9 செ.மீ., தேக்கடியில் 1.3 செ.மீ. மழை அளவு பதிவானது.
தொடர் மழையால் முல்லைப்பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அணை நிலவரம்:
அதன்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 620 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 300 கன அடியாக இருந்தது. இதேபோல் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 46.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 41 கன அடியாகவும் இருந்தது. பலத்த மழையால் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, வினாடிக்கு 331 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. மேலும் அணையின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 47.08 அடியை எட்டியது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுதவிர 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 108 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. மேலும் 126 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 கன அடியாக இருந்த நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 47 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமாக பெய்த மழையால் தேனி மாவட்ட மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தொடர் மழையால் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வார விடுமுறை நாளில் இன்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.