'ராமேஸ்வரத்தில் பச்சை மற்றும் கருநீலமாக மாறிய கடல்’- மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி...!
’’பாம்பன் கடல்பகுதி பச்சை நிறத்திலும், கீழக்கரை கடல்பகுதி கருநீல நிறத்திலும் காட்சி அளிக்கிறது’’
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடாவில் நேற்று முதல் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக கருநீல நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருவதன் காரணமாக, கீழக்கரை கடற்கரையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது உடனடியாக மீன்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்க மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று காலையில் பாம்பன் மற்றும் கீழக்கரை கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசியது. அதை தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் சென்று பார்த்த போது பாம்பன் கடல்பகுதி பச்சை நிறத்திலும், கீழக்கரை கடல்பகுதி கருநீல நிறத்திலும் காட்சி அளித்தது. இதனையடுத்து, கீழக்கரை கடல்பகுதியில் இன்று காலை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் பாம்பன் கடல்தண்ணீர் பச்சை மற்றும் கருநீல நிறங்களில் தெரிகிறது.
அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கும் நிலை வரும். இதனால்தான் மீன்கள் இறந்து இன்று கரை ஒதுங்கியுள்ளன.இது இரு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும்,இதற்காக யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த மாற்றமானது, ஆண்டு தோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்., மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகையை சேர்ந்த மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.