தீபாவளி எதிரொலி...! - ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு...!
’’ஆடுகளை பொருத்தவரை ஒரு ஆடு 2000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை’’
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளதையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்கும் பட்டாசு கடைகள் மற்றும் இனிப்பு வகைகள் வாங்குவதற்கு கடை வீதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடி வருகிறது. அதேபோல் தீபாவளி தினத்தன்று இறைச்சி பிரியர்களும் தங்களுக்கு பிடித்த இறைச்சிகளை சமைத்து சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தீபாவளியை ஒட்டி கோழிகள் ஆடுகள் விற்பனை படுஜோராக தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் ஆடு, கோழிகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் ஆட்டுச் சந்தையில் ஆடு ,கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த எரியோடு, நத்தம், சாணார்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இந்த சந்தைக்கு வந்து தங்கள் வளர்த்த ஆடு கோழிகளை விற்பனை செய்தனர். இதில் ஆடுகளை பொருத்தவரை ஒரு ஆடு 2000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் ஆண்டிபட்டியில் நடந்த ஆட்டுச் சந்தையில் ஆண்டிபட்டி சுற்று வட்டாரம் மற்றும் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில் குரும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை வருவதையொட்டி ஆண்டிபட்டி சந்தையில் வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் இயற்கையான முறையில் வர்க்கப்படும் வெள்ளாடுகள் இறைச்சி அதிக ருசி கொண்டதாக இருக்கும் என்பதால் இறைச்சி கடைக்காரர்கள் தரமான வெள்ளாடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி சந்தையில் வெள்ளாடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் ரூபாய் 9 ஆயிரம் முதல் முதல் 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட வெள்ளாடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் சில்லறை விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மற்றும் ஆண்டிபட்டியில் நடந்த இந்த ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கூறுகையில் ஆடுகள் குறைவாகவே இருப்பதால் தாங்கள் கொண்டு வந்த ஆடுகள் சில மணி நேரத்தில் முற்றிலும் விற்பனையானதாக கூறினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்