திண்டுக்கல்லில் திமுக பிரமுகரை கொல்ல முயன்ற சம்பவம் - 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
திமுகவை சேர்ந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரை கொலை செய்யும் முயற்சியில் அறிவாளால் வெட்டிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சோந்தவா் மு. மீரான்பாபு (35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சோந்தவா் விஜயராஜ் (45) திமுக பிரமுகா். அதே பகுதியைச் சோந்த அதிமுக பிரமுகரான மோகன்ராஜ் (38) என்பவருக்கும், மீரான்பாபு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரையும், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் கடந்த மாதம் 15 ஆம் தேதி கொலை செய்யும் முயற்சியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் காயமடைந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் அதில் பதிவான காட்சிகளை கொண்டு திண்டுக்கல் பெரியகடைவீதி பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (29), அதே பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்சா (48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பெரியகடைவீதியை சேர்ந்த மாநகராட்சி 21 ஆவது வார்டு முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் மோகன்ராஜ் (31), திமுக பிரமுகர்கள் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்று கூறி சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவருடைய தந்தை விஜயகுமாரை (65) பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23), சிவசூரியன் (23), சுகுமார் (33), முகமது ஆரிப் (23), ஆகியோர் பதுங்கியிருக்கும் இடம் குறித்தும் போலீசாரிடம் விஜயகுமார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் சஞ்சய்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த குற்றவாளிகள் 9 பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மோகன்ராஜ்(32), சஞ்சய் குமார்(21), சிவசூரியன்(23), அப்துல் லத்தீப்(33) ஆகிய 4 பேரையும் மாவட்ட எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தீபாவளிக்கு பட்டாசு வடியில் ஹோம் மேட் சாக்லெட்கள் தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!