தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?
தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
தேனியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த அதிகாரிகள் குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்ட விரோத பணபரிமாற்றம் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சங்கர். இவர் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தேனி அருகே உள்ள போடி இரட்டை வாய்க்கால் அருகில் ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக உள்ளார். இவர்களின் மகன் லோகேஷ் திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். சங்கர் நடத்தி வரும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில், கேரள பதிவெண் கொண்ட காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வந்தனர். அவருடன் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை தந்த நிலையில், குடோனில் ஒட்டி இருந்த வர்த்தக நிறுவனம் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து பூட்டை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். குடோனுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. திமுக நிர்வாகி சங்கரின் வீடு அலுவலகம், ஆகிய இடங்களுக்கும் அமலாக்கத்துறையினர் சோதனைக்காக சென்றனர். ஆனால் பூட்டிக்கிடந்ததால், திரும்பி குடோனுக்கே வந்துவிட்டனர்.
அதேபோல, போடியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரியான சுந்தர் ராஜன், என்பவரது வீடு மற்றும் ஏலக்காய் விற்பனை கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏலக்காய் வர்த்தகம் செய்ததில், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த 7 மாதத்தில் ரூ.1,200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போடியில் கடந்த 4 ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற்றது என்று தெரிவித்தனர்.





















