மதுரை - போடி இடையே 90.4 கி.மீ., அகல ரயில்பாதையில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்
ரயில்வே வாரியம் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் தற்போது ரயில் சேவையானது தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை - போடி இடையே 90.4 கி.மீ., அகல ரயில்பாதையில் மின்மயமாக்கள் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்திட்டத்திற்காக 93.59 கோடி மதிப்பீட்டில் வேலைகள் நடந்து வருகிறது. இந்தாண்டு ஏப்ரலில் துவங்கிய பணி இதுவரையில் 73 சதவீதம் மின் கம்பத்திற்கு அடிதளமிட்டுள்ளனர். 37 சதவீதம் மின் கம்பம் நடும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதுவரையில் 9 கி.மீ தூரத்திற்கு மின் கம்பங்கள் இடையே மின் வயர்கள் இணைக்கும் பணி நடந்துள்ளது. இப்பணிகளில் மதுரை , உசிலம்பட்டி, தேனி , போடி ஆகிய இஅந்து ரயில்வே ஸ்டேசன்கள் இணைக்கும் வகையில் நடந்து வருகின்றன. மேலும் ரயில்வே ஸ்டேசன்களில் உள்ள மாற்று ரயில் பாதைகள் , தேனி சரக்கு நிலைய ரயில் பாதை ஆகியவற்றிலும் மின்மயமாக்கல் பணி நடந்து வருகின்றனர். மதுரை - போடி அகல ரயில் பாதையில் உள்ள 7 பெரிய பாலங்கள், 225 சிறிய பாலங்களிலும் மின் கம்பங்கள் நடும் பணிகள் நடந்து வருகிறது.
மின்சார ரயில்களை இயக்க ஆண்டிபட்டி அருகே வள்ளல் நதி கிராமத்தில் சப்ஸ்டேசன், க.விலக்கு பகுதியில் அமைய உள்ளது. குறிப்பாக ரயில் சேவையில் பயணிகளின் சிரமங்களை தவிர்க்க வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேசன்களில் சிறியளவிலான மின் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்படுகிறது. இவற்றின் முழு கட்டுப்பாடுகளும் மதுரை மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கும் வகையில் பணிகள் துவங்கி உள்ளன. மேலும் தேனி ரயில்வே ஸ்டேசனில் மின் மயமாக்கல் பராமரிப்பு நிலையமும் அமைய உள்ளது. இது குறித்து மின் மயமாக்கல்துறை அலுவலர்கள் கூறுகையில், ரயில்வே வாரியம் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளது. இதனால் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். மின் மயமாக்கல் பணிகள் விரைவில் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றனர்.