Dindugal : "சாலை வசதி இல்லாத மலை கிராமம்” : பெண்ணை டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்..
8 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட 45வயது பெண்ணை டோலிகட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி கொண்டு வந்து 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம்.
கொடைக்கானலை ஒட்டியுள்ள சின்னூர் மலைக்கிராமத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட 45வயது பெண்ணை டோலிகட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி கொண்டு வந்து 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம். உடல் நிலை பாதிக்கப்படும் நபர்களை அவசர கால தேவைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிரமத்தில் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளக்கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர்,பெரியூர்,சின்னூர் காலனி,கடப்பாறை குழி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன, இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து கரடு முரடான வனப் பகுதியினை கடந்து சென்றும் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை, அவசர கால தேவை உள்ளிட்ட இதர தேவைகளுக்கு பெரியகுளம் பகுதியை பயன்படுத்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர்,
மேலும் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர், ஒரு சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டதாக இப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர், இதனையடுத்து சின்னூர் காலனியை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த மாரியம்மாள்(45) என்ற பெண்ணிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது,
மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லும் கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண்மணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவர் வீட்டிலேயே முடங்கினார், இதனை தொடர்ந்து இன்று ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கடந்த 8 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் டோலி மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் சுமந்து வந்து சின்னையபாளையம் என்ற இடத்தில் உள்ள சாலைக்கு கொண்டுவரப்பட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்,
சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெண் உயிரிழந்தார். இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இவர்களுக்கு விரைவில் சாலை மற்றும் இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள இரண்டு ஆறுகளில் துரிதமாக பாலங்கள் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.