தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையைப் போக்க புதிய திட்டம்
’’இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான சுமை குறையும் மற்றும் கால்நடைகளுக்கான இன விருத்தியை அதிகரிக்கும்’’
தேனி மாவட்டம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அப்பகுதியின் இயற்கை வளங்களும், விவசாயமும் தான். தேனி மாவட்ட மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர். இங்கு வைகை அணை, சோத்துப்பாறை அணை, சுருளியாறு என அதிக அளவில் நீர் வளம் கொண்டு உள்ளதால் நீர் பற்றாக்குறை என்ற நிலை அரிது. இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு கால்நடைகளின் பங்கு முக்கியமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆடுகள், மாடுகள், மலை மாடுகள், கோழிகள், எருமை போன்ற கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இவை பெரும்பாலும் விவசாயத்திற்காகவும், பால் உற்பத்திக்காகவும் சில நேரங்களில் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தேனி மாவட்ட மக்களையும் கால்நடைகளையும் பிரிக்க முடியாது என்றே கூறலாம். கால்நடைகளுடன் மிகுந்த தொடர்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனையாக பெரும்பாலான மக்கள் கூறுவது தீவன பற்றாக்குறை என்பது தான்.
தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகவும் உள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகள் மேய்ச்சலுக்காக தரிசு நிலங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். மழை காலங்களில் மேய்ச்சலுக்கு தீவனம் கிடைப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கும். ஆனால் கோடை காலங்களில் தீவனம் கிடைப்பது சற்று கடினம் என்றே கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். இப்பிரச்சினைக்கு தீர்வாக கால்நடை துறையின் சார்பாக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கால்நடைத் துறை இயக்குனரகத்தின் பரிந்துரையின் பெயரில், தப்புக்குண்டு ஊராட்சி மற்றும் பூமலைகுண்டு ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக 20 ஏக்கரில் புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதேபோன்று போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள அரசு நிலத்தில், 70 ஏக்கரில் ஒரு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த கால்நடை மேய்ச்சல் நிலத்தை உருவாக்கவும் மற்றும் விவசாயிகளின் பயிற்சி மையம் உருவாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக ரூபாய் 40.89 லட்சத்தில் திட்டப் பணிகள் துவங்கியுள்ளன.
இதுகுறித்து கால்நடைத் துறையின் இணை இயக்குனர் கூறுகையில், " தேனி மாவட்டத்தில் கோடைகாலத்தில் நிலவும் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையை போக்கவும், விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படவும் இத்திட்டம் பயன்படும். இத்திட்டத்தின் கீழ் மேய்ச்சலுக்கான தரிசு நிலங்களில் வேம்பு, கல்யாண முருங்கை, புங்கை என பல்வகை பொருட்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள், கசிவு நீர்க் குட்டைகள் போன்றவை ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பல ஆயிரம் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான சுமை குறையும் மற்றும் கால்நடைகளுக்கான இன விருத்தியை அதிகரிக்கும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X