ஆபாசமாக பேசி அராஜகத்தில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் சஸ்பென்ட் - தேனி அருகே பரபரப்பு
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 விதி எண் 160 (8) i (a) (c) ii மற்றும் iii ன் படி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக தமிழ்நாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல் நபர்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளராக உள்ள இவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். நகரச் செயலாளராக இருந்து வரும் இவர் பேரூராட்சி பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தூய்மை பணியாளர்களான ஆண்களை வாடா, போடா என ஒருமையில் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். இதுதவிர இவர் வீட்டில் இருந்து கொண்டே பேரூராட்சி பணியாளர்களை வீட்டிற்கு வரவழைத்து சிகரெட் வாங்கி வா, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வா என அடிமை போல வீட்டு வேலையும் வாங்கி வந்ததாக புகார் கூறப்படுகிறது.
மேலும், பேரூராட்சியில் குடிநீர் எடுத்து விடும் பணியாளர்களை தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்திருக்கிறார். இதுதவிர கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பேரூராட்சி பணியாளரை தரக்குறைவாக பேசியதுடன், அவர் கையில் இருந்த தீர்மான நோட்டை பறித்து ஆவேசமாக கையெழுத்திட்டு தூக்கி எரிந்து விட்டு சென்றுள்ளார். இதனால் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர், உப தலைவர் மற்றும் அதிமுக உட்பட உறுப்பினர்கள் என அனைவரும் இவருக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். இது தவிர பேரூராட்சி பணியாளர்கள் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் செல்வராஜ் அந்த நோட்டீசையும் மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிலாளர்களை தொடர்ந்து அவமரியாதையாக பேசி வரும் திமுக கவுன்சிலர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பணியாற்றும் பெண்கள் உட்பட சுமார் 80 தூய்மை பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் கடந்த பிப்ரவரி 9ம் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து செல்வராஜுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தவிர செல்வராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. பழனிசெட்டிபட்டியில் உள்ள குப்பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்வது,கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கிரீன் சர்வீஸ் ட்ரஸ்ட் - சென்னை என்ற தனியார் அமைப்பு செய்து வருகிறது.
அந்த அமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளரான வேல்முருகன் (39). என்பவரிடம் தனக்கு மாதம் தோறும் தனக்கு ரூபாய் 20000 மாமூல் தர வேண்டும் என செல்வராஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது. வேல்முருகன் தர மறுத்த நிலையில் அடியாட்களுடன் சென்று, ஆபாசமாக பேசி, உருட்டுக் கட்டையால் வேல்முருகனை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக போலீசாரை வழக்கு பதிவு செய்ய விடாமல் செல்வராஜ் தடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் CR.MP 7232/2023 வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி,செல்வராஜ் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 147, 294 (b),323,341, 211, 506(2) அதிக பிரிவுகளின் கீழ் கடந்த 12-10-2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து அராஜகத்திலும், அடாவடியிலும் ஈடுபட்டு வரும் திமுக நகரச் செயலாளரும், 3வது வார்டு கவுன்சிலருமான செல்வராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேரூராட்சியில் பணியாற்றும் ஒட்டுமொத்த பணியாளர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செல்வராஜ் அடுத்த இரண்டு பேரூராட்சி கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 விதி எண் 160 (8) i (a) (c) ii மற்றும் iii ன் படி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 3வது வார்டு உறுப்பினர் ப.செல்வராஜ் அடுத்த 2 பேரூராட்சி கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 விதி எண் 160 (8) ன் கீழ் தமிழ்நாட்டில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் கவுன்சிலர் என்பதும் அதுவும் ஆளும் திமுக கவுன்சிலர் குறிப்பிடத்தக்கது. இந்த பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி மற்றும் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோர் உள்ளனர் .திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திமுக பேரூராட்சி உறுப்பினரும்,பேரூர் செயலாளருமான செல்வராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.