Dindigul: ரயில்வே கிராசிங்கில் விதிமுறைகளை மீறிய திமுகவினர்; சிக்கிய பள்ளி வாகனம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம். காவல்துறை முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல்: ரயில் வருவதால் கேட்டை அடைத்துக் கொண்டிருந்த ஊழியரிடம் திமுக எம்பி, எம்எல்ஏ அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார்கள், கேட்டை மூட வேண்டாம் என்று நிறுத்தி நீண்ட வரிசையில் கட்சியினரின் கார்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 13வது வார்டு 8 நாயக்கர் காலணியில் பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி கொடைரோடு வந்தனர். திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களில் வரவேற்பு அளித்தனர். பின்னர், அரசு நிகழ்ச்சி நடக்கும் ஏத்து நாயக்கர் காலனிக்கு வாகனங்களில் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் உள்ளது. அப்போது மாலை 6,20 மணிக்கு நெல்லையிலிருந்து தாதர் மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டு அலாரம் எச்சரிக்கை ஒலித்துக் கொண்டு இருந்த பொழுது ரயில்வே கேட்டை ஊழியர் அடைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கும்பலாக வந்த திமுகவினர் கேட்டை அடைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது . இதனால் கேட்டை அடைத்துக் கொண்டிருந்த ரயில்வே கேட் கீப்பர் கேட்டை பாதி அளவில் நிறுத்தினார். அதன் வழியாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஊர்வலமாக கட்சியினரால் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடு ரயில் பாதையில் பள்ளியின் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் கேட்சிப்பர் அங்கிருந்த போலீசார் ஆகியோர் பதட்டம் அடைந்தனர்.
ரயில் வருவதற்கு சிறிது நிமிடமே இருந்த நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் வாகனங்களை வெளியே செல்லுமாறு கூறினார். வாகனங்கள் செல்ல முடியவில்லை அம்மைநாயக்கனூர் எஸ்ஐ கருப்பையா துரிதமாக செயல்பட்டு அனைத்து வாகனங்களையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி கேட்டை மூட வைத்து கேட் மூடிய ஒரு சில நிமிடத்தில் அதிவேகமாக வந்த ரயில் கேட்டை கடந்து சென்றது. ரயில் கடந்த சென்ற பின்பு அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினர் கேட்சிப்பர் உள்ளிட்ட அனைவரும் பெருமூச்சு விட்டதோடு சம்பவத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
ரயில்வே சிக்னல் கிடைக்கப்பெற்று எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பப்பட்ட பின்பு வலுக்கட்டாயமாக ரயில் கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்த திமுகவினரால் மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக காவல்துறை பொதுமக்கள் முயற்சியால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் தனது கட்சியின் தொண்டர்களுக்கு, பொது மக்களுக்கு இடையூறும் விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடந்து கொள்ள கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்