தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி - 48 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய் வரையில் மோசடி . பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவிக்கப்பட்டது. அதை உண்மை என நம்பி ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கிடையே அந்த நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் திடீரென்று மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திரும்ப பெறமுடியாமல் சிரமப்பட்டனர்.
மேலும் அதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 கிளைகளிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டது. எனவே திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை அந்த அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றனர். ஆனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பே அந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. எனினும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் சாவியை பெற்று, அலுவலகத்தை திறந்து போலீசார் சோதனை செய்தனர். அங்கு நிதிநிறுவனம் தொடர்பான ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் போலீசார் திரும்பி சென்றனர்.
இதேபோல் தேனியில் தபால் அலுவலகம் செல்லும் சாலையில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்ட இடத்தில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜநளாயினி தலைமையில் சோதனையிட்டனர். அப்போது அந்த அலுவலகத்தை சில மாதங்களுக்கு முன்பே மூடிவிட்டு சென்று விட்டதாகவும், தற்போது அந்த கட்டிடம் வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் பொருட்கள் அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த அறையின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கிருந்த கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்த அறைக்கு சீல் வைத்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்