Dalit in Madurai: வென்ற போராட்டம்.. 400 ஆண்டுகளுக்குப் பின்பு ஆனையூர் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள்
அரசியல் சட்டமோ, அதிகார மாற்றமோ தலித் சமூகத்தினருக்கு எவ்வித பயனும் அளிக்கப்போவதில்லை. சமூக மாற்றமே நிரந்தர சுதந்திரத்தைப் பெற்றுத் தர சாத்தியக் கூறு.
சட்டப்போரட்டங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஆனையூர் கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோவிலுக்குள் பட்டியல் இன சமூகத்தினர் நுழைந்தனர்.
மதுரை ஆனையூர் கொக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள ஆறு கிரமாங்களில், பிரமலைக் கள்ளர் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு, 400 ஆண்டுகள் பழமையான பேக்காமன் கருப்பசாமி கோவில் பொதுச் சொத்தாக இருந்தாலும், கள்ளர் வகுப்பினரின் உரிமைச் சொத்தாக இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாக, பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று எழுதப்படாத சட்டமும் இயங்கி வருகிறது.
கோவிலில் பூசாரியாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும்,அவருடைய சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், அப்பகுதியில் சமூக மாற்றத்தை முன்னெடுக்க விரும்பிய சில இளைஞர்கள், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கிராம மக்களிடம் முறையிட்டனர். இதற்கு கிராம மக்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காலம் காலமாக பின்பற்றப்படும் கோவில் நடைமுறைகளை யாராலும் மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து, கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதை உறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர், வட்டாசியர், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இதில், ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும், நாட்டில் உள்ள எல்லா கோயில்களிலும் அனைவரும் நுழைய அனுமதி உண்டு என்பதை கிராம மக்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கோவில் பூசாரிக்கு அருள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்," காலங்காலமாக பின்பற்றப்படும் கோவில் வழிமுறைகளை மீறி வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அம்மனின் பதில் கிடைத்துவிட்டதாக ஊர் மக்களும் நிம்மதி கொள்ளத் தொடங்கினர்.
இதனையடுத்து, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் முதன் முறையாக நுழைந்தனர். கோவில் போன்ற பொது இடங்களில் தலித் மக்கள் நுழையக்கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் உடைத்தெரிக்கப்பட்டது.
அரசியல் சட்டமோ, அதிகார மாற்றமோ தலித் சமூகத்தினருக்கு எவ்வித பயனும் அளிக்கப்போவதில்லை. சமூக மாற்றமே நிரந்தர சுதந்திரத்தைப் பெற்றுத் தர சாத்தியக் கூறு என்ற அம்பேத்கரின் கூற்று மதுரை ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் மெய்பிக்கப்பட்டுள்ளது.