புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்! மதுரைக்கு உள்ளூர் விடுமுறை - எப்போது?
உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை முன்னிட்டு, மதுரையில் வரும் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களில் வரும் முதல் மாதமான சித்திரை மாதம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். சித்திரை மாதம் வந்தாலே தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிக மிக புகழ்பெற்றது ஆகும்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்:
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி தென் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் குவிவார்கள். இதனால், சித்திரை திருவிழாவை காண மக்கள் குவிவது வழக்கம். சித்திரை திருவிழாவின் முக்கிய வைபோகமான கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண மட்டும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிவார்கள்.
இந்த நிலையில், கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி புறப்பட உள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சியும், 23ஆம் தேதி கள்ளழகர் தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
மதுரைக்கு உள்ளூர் விடுமுறை:
இந்நிலையில் 23ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 12ம் தேதி கொடியேற்றப்பட்டது. கோயிலின் உள்ளே இருந்த சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. சித்திரை திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டுள்ளதால் மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகமும் நடைபெற இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினமான வரும் 23ம் தேதி மதுரையில் போக்குவரத்து முற்றிலும் வேறு பாதைகளில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: CM MK Stalin: GST வரி அல்ல… வழிப்பறி.. பிரதமர் மோடியை கடுமையாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
மேலும் படிக்க: Fishing Ban: இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்...படகுகளை சீரமைப்பு பணியை தொடங்கிய மீனவர்கள்