(Source: ECI/ABP News/ABP Majha)
புதியதாக கட்டப்பட்டுவரும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி
''மத்திய அரசின் அனுமதியால், நடப்பாண்டில் கூடுதலாக 850 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்''
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதற்காக உடனடியாக நிதியும் ஒதுக்கப்பட்டது. கட்டடப்பணிகள் தற்போது 345 கோடியில் வேகமாக நடக்கிறது. தற்போதைய நிலையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லுாரி மாணவர் வகுப்பறை கொண்ட மெயின் பிளாக், ஆய்வகம், மாணவர் விடுதிகள், ஆடிட்டோரியம், டீன் அலுவலகம், குடியிருப்புகள், மருத்துவக்கல்வி பேராசிரியர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படுக்கைகளுக்கான கட்டடம், பரிசோதனை கூடம் உள்ளிட்ட கட்டடப்பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளும் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனைத்து கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் கட்டுமானப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது. இதில் பெயின்டிங், தண்ணீர் குழாய்கள் அமைப்பு, கழிவறைகளுக்கு குழாய் அமைப்பு, மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட வேலைகள் மட்டுமே உள்ளன. கல்லுாரி மெயின் பிளாக் கட்டடம் தரை தளத்துடன் ஏழு மாடிகள் கொண்டது. இந்த கட்டடப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விடுதி பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மருத்துவக்கல்லுாரி, மாணவர் விடுதி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, இங்கு அமைக்கப்படும் பூந்தோட்டம், மரக்கன்றுகளுக்கு பயன்படுத்த உள்ளனர். மேலும் சுத்திகரித்த நீரை கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளனர். மருத்துவமனை கட்டடப்பணிகளில் 750 படுக்கைகள் தேவை என்ற நிலையில் கூடுதலாகவே 800 படுக்கைகள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் நடப்பு ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை மேம்படுத்தும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு 11 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுகல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஆயிரத்து 650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில், புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோல், திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'கூடுதல் இடம் கிடைக்கும்'
மத்திய அரசின் அனுமதியால், நடப்பாண்டில் கூடுதலாக 850 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். ஏற்கெனவே, கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கடாமல் இருக்கும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 434 பேர் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் பயனடைந்தனர். தற்போது கூடுதலாக 850 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கும் நிலையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் கூடுதல் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.