மழையின்மையால் சர சரவென உயர்ந்த ஏலக்காய் விலை.. கிலோவிற்கு 400 ரூபாய் முதல் விலை ஏற்றம்
கடந்த மாதம் தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,900 வரை விற்கப்பட்டது.
கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஏலக்காய் உற்பத்தி மற்றும் வர்த்தகங்களில் இந்திய அளவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதன்மை வகிக்கும் பகுதியாகத் திகழ்கின்றது. கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய், போடிநாயக்கனூரில் உள்ள மத்திய அரசு நறுமணப் பொருட்கள் நிறுவனம் சார்பாகவும், தனியார் ஏல மையங்கள் சார்பாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏலக்காய் தரம் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3,000-ஐ தாண்டிய ஏலக்காய் விலை, அதன் பின்பு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி குறைவு காரணமாக விலை குறைந்து, முதல் தர ரகம் ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,200 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக உற்பத்தி குறைந்து காணப்பட்டதாலும், ரம்ஜான் போன்ற பண்டிகை காரணமாகவும், கடந்த மாதம் தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,900 வரை விற்கப்பட்டது.
அதேபோல ஏலக்காய் வரத்தும் குறைவு காரணமாகவும், தற்போது முதல் தர ஏலக்காய் கொள்முதல் விலை ரூபாய் 3,000-ஐ தாண்டி அதிகரித்து உள்ளது. தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,900 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 400 முதல் 500 வரை விலை அதிகரித்து கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3,300 முதல் 3,400 வரை விற்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ரக ஏலக்காய் விலை ரூபாய் 3 ஆயிரத்தை தாண்டியதால் ஏலக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலை நிர்ணயிக்கப்படும். ஏலக்காய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு விளைச்சல் மற்றும் காய் வரத்து குறைவாக உள்ள நிலையில் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















