மேலும் அறிய
Advertisement
தெப்பக்குளத்தை பராமரிக்காத அதிகாரிகள் - ஏன் சம்பளம் பிடித்தம் செய்ய கூடாது என நீதிபதிகள் கேள்வி ?
’’தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது, சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே எனவும், நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்’’
மதுரை சின்னஅனுப்பானடியை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. அதன் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளது. நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிக்கப்பட்டு கழிவுநீர் கலக்கிறது.
இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் 2011ஆம் ஆண்டில் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்மேல் நடவடிக்கை இல்லை. தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் 2019 ஆம் ஆண்டில் சில கடைகள் அகற்றப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதை தடுத்து தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத்துறையிடம் சீராய்வு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் தெப்பக்குளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தெப்பக்குளத்தில் மைய மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது, சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே எனவும், நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். மேலும் மனுதாரர் தாக்கல் செய்த போட்டோகளை பார்க்கும் பொழுது தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை என தெளிவாகிறது. தெப்பக்குளத்தின் தற்போதைய புகைப்படங்களை இந்து அறநிலையத்துறை மற்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க அறிவுறுத்தியும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion