சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
”பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் பேட்டி.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது.
விதி மீறல்கள்
சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர் விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன், ஆலை ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், ஆலை மேற்பார்வையாளர் ஆகிய 3 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அமைச்சர் அளித்த பேட்டி, “தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும். விபத்துக்கு காரணம் பேராசை. பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 4-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.