தேனி : தமிழனின் தொன்மைகூறும் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருங்கற்கால சின்னங்கள்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழனின் வாழ்க்கையை சுட்டிக்காட்டும் பெருங்கல் சின்னங்கள் தென்படுகின்றன.
தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் இரும்பு காலத்தை பெருங்கற்காலம் என்று குறிப்பிடுகிறார்கள், பெருங்கற்காலத்தில் இங்கு நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு இந்த கல்திட்டைகள் முக்கிய சான்றாகும். பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்த இடத்தில் பாறைகளைக் கொண்டு அமைப்புகளை உருவாக்கிய காலத்தை பெருங்கற்காலம் என்று குறிப்பிடுகிறார்கள். இறந்தவர்கள் நினைவாக கல்வட்டம் அமைத்து வழிபட்டு வந்ததாக பல சான்றுகள் உள்ளன. இந்த கல் வட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது கல்திட்டை, கல்பதுக்கை, குடைக்கல், குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறையாகும்.
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் குமணன் தொழு ஊராட்சிக்கு உட்பட்ட வெம்பூர் ,கணேசபுரம், கல்லுப்பட்டி மலைப்பகுதிகளிலும் போடி அணைக்கரைப்பட்டி ,மரக்கா மலை, முட்டு கோம்பை மலைப்பகுதிகளிலும் பின்ன தேவன் பட்டி கரட்டுப்பட்டி, சொக்கநாதர் பட்டி ,தம்மனம்பட்டி போன்ற இடங்களில் பழமையான கல்திட்டைகள் கல் வட்டங்கள் காணப்படுகின்றன. இவை தவிர சிதைந்த தாழி ஓடுகள் மண்ணில் மேல் பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. பொதுவாக மலைப் பகுதிகளில் வசித்தவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைத்து அதற்கு அடையாளமாக ஒவ்வொரு இடத்திலும் 15 முதல் 20 அடி உயரம் கொண்ட கல்திட்டை வைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. கல்திட்டை என்பது மலைகளின் மேல் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் பரந்துவிரிந்த பாறையின் மேல் இயற்கையாக கிடைக்கும் பலகை போன்ற கற்களை கொண்டு அரை போல உருவாக்கப்படுவதாகவும் அதன்பின் இறந்த மனிதர்களை வைத்து பலகை கற்களை கொண்டு மூடிவிடுவார்கள் இந்தக் கல்லறைகள் சரிந்து கீழே விழாமல் இருக்க சிறிய கற்களை ஆதாரமாகக் கொண்டு சுவர் போன்று அவர்கள் எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் இது போன்ற பெரிய பல திட்டங்களை அக்கால மனிதர்கள் உருவாக்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2013-ஆம் ஆண்டு வைகை நதி உற்பத்தியாகும் வெள்ளிமலை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையினர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கு அடையாளமாக விளங்கும் பெருங்கற் சின்னங்களை கண்டுபிடித்தனர் .இந்த கல்திட்டைகள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனவும் இப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமகாடாக இருந்திருக்கலாம் எனவும் கண்டுபிடித்தனர்.
இக் கல்திட்டங்கள் மூலமாக இப்பகுதியில் பெருங்கற்காலத்தில் இனக் குழுவாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது .இந்த கல்லறைகள் ,குழுக்களிடையே நடந்த சண்டையில் வீரத்துடன் போராடி உயிர் நீத்த அல்லது குழுவின் தலைவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக இதுபோன்ற கல்திட்டைகள் அனைத்து மனிதர்களுக்கும் எடுப்பதில்லை இந்த இடங்களை கற்கால மனிதர்கள் தெய்வமாக வழிபடும் பூஜைகள் செய்து வந்துள்ளனர். இவ்வாறு வாழ்ந்த இந்த இடத்தை கோயில் காடு என முன்னோர்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர் .கல்வட்டம், கற்பதுக்கை தாழிகள் உள்ள ஈமக் காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபாடு செய்வதும் இன்றும் மக்களிடையே இருந்துவருகிறது.
அதன் அடிப்படையில் இந்த கல் வட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். இதுபோன்ற வடிவமைப்புகளை கொண்ட பல கல்திட்டைகள் கணேசபுரம் மலைப்பகுதிகளில் மருதமலை ,முட்டு கோம்பை மலைப்பகுதிகளில் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் இது போன்ற பழங்கால சின்னங்களை இடங்களை போற்றிப் பாதுகாக்கிறார்கள் ,இங்கு இதன் நிலையே வேறு மாதிரியாக உள்ளது. 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த காடாக அமைந்த இந்த கல்திட்டைகள் தற்போது சிறிது சிறிதாக விவசாய நிலங்களாக மாறி வருகிறது. இந்த பெருங்கற்காலத்தில் இங்கு நம் முன்னோர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த கல்திட்டைகள் முக்கிய சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.