நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை தொடர் உயர்வு! மீண்டும் ரெட் அலர்ட்! அச்சத்தில் கேரள மக்கள்
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது கேரளம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடும் நிலச்சரிவு:
தொடர் மழை காரணமாக சூரல்மலை காட்டாற்று வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 95 பேர் பலி, 128 பேர் மருத்துவமனையில் அனுமதி 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக தகவல், வெள்ளர் மலை பள்ளியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கிருந்தும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் வயநாடு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் சூரல்மலை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு மேப்பாடி முண்டகை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 42 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-முறை ஏற்பட்ட நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 45 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
அவசர எண் அறிவிப்பு:
குறிப்பாக சூரல்மலை முண்டகை வழித்தடத்தில் உள்ள பாலமும் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகளும் பாதிப்படைந்துள்ளது. மீட்பு பணிக்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு ராணுவத்தை அனுப்ப உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள நிலையில் வெள்ளர் மலை பகுதியில் உள்ள பள்ளி கூடமும் முற்றிலும் தண்ணீரால் மூழ்கியுள்ளது.
பள்ளி வளாகத்தில் இருந்தும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வருவாய்துறை அமைச்சர் கே.ராஜன் மீட்பு குழு செல்ல முடியாத பகுதிகளில் உள்ளவர்களை ஹெலிகாப்படர் மூலம் மீட்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை 8086010833 என்ற அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் கேட்டு கொண்டுள்ளார்.
கேரளாவில் 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட்:
மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் இரண்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் என மத்திய வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் இந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.