Mayor Mahalakshmi: ஒரு கவுன்சிலர் கூட கலந்து கொள்ளவில்லை... பதவியை தக்க வைத்த மகாலட்சுமி - நடந்தது என்ன?
Kanchipuram Mayor Mahalakshmi: ஒரு கவுன்சிலர் கூட கலந்து கொள்ளாததால் மேயருக்கு, எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தொடர்கிறார் மகாலட்சுமி யுவராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார். காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது.
திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதனை அடுத்து மாநகராட்சி ஆணையரிடம் 33 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுத்தனர். இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கையில் தீர்மானத்திற்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் ஆகியவை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்தனர். சரியாக 10 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூட்டம் துவங்குவதாக அறிவித்தார்.
துவங்கியது கூட்டம்
மாநகராட்சி கூட்டம் துவங்கிய பிறகு 10:10 மணியளவில் 34 ஆவது வார்டு கவுன்சிலர் பிரவீன் குமார் கூட்டத்திற்கு வருகை புரிந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் குளறுபடி இருப்பதாக கூறி மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றுவிட்டார். வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாததால் பிரவீன் குமாரும் கூட்டத்திற்கு வராததாக கருதப்படும் என ஆணையர் கூறியும், தான் மனு கொடுக்க தான் வந்ததாக கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
தோல்வியில் முடிந்த கூட்டம்
இதனை அடுத்து சுமார் 11:40 மணி வரை கவுன்சிலர்கள் வருகைக்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் காத்திருந்தனர். தொடர்ந்து யாரும் வராததால், கூட்டம் முடிந்ததாகவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்துச் செய்தியாளரை சந்தித்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக 33 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஒன்பதாம் தேதி அறிவித்திருந்தேன். இன்று நம்பிக்கையில்லா கூட்டம் நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச் சீட்டுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எந்த மாமன்ற உறுப்பினரும் வராததால் கோரம் இல்லாததால் , நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெறவில்லை என தெரிவித்தார் .
இதுகுறித்து மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி ஆணையர் மீது நம்பிக்கை இல்லை எனவும், அவர் நடத்தும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.