காஞ்சிபுரம்: அதிர்ச்சி! வாகன திருட்டில் டாப் 5-ல் காஞ்சிபுரம்! காரணம் என்ன? இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
"இந்தியாவிலேயே அதிக வாகன திருட்டு நடக்கும் முதல் 6 இடங்களில், காஞ்சிபுரம் மாவட்டம் இடம்பெற்று இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது"

இந்தியாவிலேயே அதிக வாகன திருட்டு நடக்கும் முதல் 6 இடங்களில், காஞ்சிபுரம் மாவட்டம் இடம்பெற்று இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது
காலத்தின் கட்டாயம் இருசக்கர வாகனம்
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்கள் என்பது, காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் என பலதரப்பட்ட மக்களும் இருசக்கர வாகனங்களை அத்தியாவாசிய தேவைக்காகவும், பணி நிமித்தமாகவும் வாங்கி வருகின்றனர். ஆனால் இருசக்கர வாகனங்களை குறிவைத்து, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. திருடப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து, உதிரி பாகங்கள் திருடப்பட்டு வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன.
இருசக்கர வாகன இன்சூரன்ஸ்
இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. விபத்து ஏற்பட்டால், இயற்கை சீற்றத்தால் வாகனங்கள் பாதிக்கப்பட்டால் அல்லது வாகனம் திருடப்பட்டால் இன்சூரன்ஸ் மூலம் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். இதனால் இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது, மிக முக்கியமாக மாறி வருகிறது. இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அதிகரித்து வருவதால், இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதேபோன்று விபத்து உள்ளிட்ட காரணத்தினால் வாகனங்கள் பாதிக்கப்பட்டாலும், இன்சூரன்ஸ்கள் கிளைம் செய்யப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான, பாலிசி பஜார் தனது ஆய்வறிக்கையில் இந்தியாவில் இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்கான முக்கிய காரணங்கள் ?
இந்தியாவில் கிளைம் செய்யப்படும் இன்சூரன்ஸ்களில் 75% விபத்து அல்லது இயற்கை பேரிடர் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் இன்சூரன்ஸ் கிளைம் என்பது, திருடு போகும் வாகனத்திற்காக கிளைம் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வாகனங்கள் கிளைம் செய்யப்படுகிறது ?
சமீபமாக இந்திய அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருசக்கர மின்சார வாகனங்களும் பயன்படுத்துபவர்களை எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் 20% அதிகமாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படுகிறது. குறிப்பாக மின்சார வாகனங்களை சரி செய்யும், செலவும் பெட்ரோல் வாகனங்களை விட 35 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் வாகனங்களை பொருத்தவரை 150 முதல் 350 சிசி வரை உள்ள இருசக்கர வாகனங்கள் அதிக அளவு இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் டாப் ஐந்து இடங்கள்
இந்திய அளவில் 50 சதவீத இன்சூரன்ஸ் கிளைம் என்பது, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திர பிரதேஷ், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தே அதிக அளவு கிளைம் செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் காப்பீடு கிளைம் செய்யப்படுவது, கடந்த 2024-25 நிதியாண்டில் 15 சதவீதம் அதிகரித்திருந்தது. வருகின்ற 2025-26 நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டாப் 5-இல் காஞ்சிபுரம்
உத்திர பிரதேஷ் மாநிலம் காசியாபாத் மற்றும் மீரட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், மேற்கு வங்காளத்தில் இஸ்லாம்பூர், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் பீகாரில் முசாபர்பூர் ஆகிய இடங்களில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் திருடப்படும் இடங்களில், காஞ்சிபுரம் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் திருட்டு சம்பவம் நடைபெற காரணம் என்ன ?
காஞ்சிபுரம் மாவட்டம் என்பது அதிக அளவு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்திற்கு பணி நிமிர்த்தமாக பல்வேறு கிராமங்களில் மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற இருசக்கர வாகனங்களை குறிவைத்து அதிகளவு திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால், வட மாநில திருடர்கள் மற்றும் உள்ளூர் திருடர்கள் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




















