காஞ்சிபுரத்தில் சோகம்: கனவு இல்லம் திறப்பதற்கு முன் உயிர் பிரிந்த மகன்! விஜய் கட்சி உதவியும் தாயின் கண்ணீர் கதறல்!
"தாயின் கண்ணெதிரே, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கட்டிக் கொடுத்த புது வீட்டில் குடியேற இருந்த மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

"காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கட்டிக் கொடுத்த வீட்டில் குடியறுவதற்கு முன்பாக, உடல் நலக்குறைவால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்தேறி உள்ளது"
உடல்நல குறைவால் அவதிப்பட்ட குடும்பம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையாரப்பாளையத்தைச் சேர்ந்த 65 வயது கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகன் 37 வயது சக்திவேல், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு சக்திவேலின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்க, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாமல் போக, தாய் கோவிந்தம்மாளும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஒருவருக்கொருவர் துணையாக இருந்த இந்த தாய்-மகன், சொந்த வீடு இல்லாமல் குடிசை வீட்டில் வசித்துள்ளனர். அந்தக் குடிசையும் வசிக்க முடியாத நிலையில் இருந்ததால், மழை மற்றும் குளிர்காலங்களில் அருகிலுள்ள கோவிலில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்ததால், அப்பகுதி மக்களும் அவ்வப்போது இருவருக்கும் உணவளித்து உதவி செய்து வந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்டிய புது வீடு
சக்திவேல் மற்றும் அவரது தாயின் நிலைமையை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் மதன் மற்றும் மாவட்ட செயலாளர் தென்னரசு, அவர்களுக்கு ஒரு புது வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களாக நடந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, புதன்கிழமை அன்று கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.
கதறிய அழுத தாய் கோவிந்தம்மாள்
அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், நேற்று மாலை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சக்திவேல் திடீரென உயிரிழந்தார். வீடு புதுப்பிக்கப்பட்டு, அதில் குடியேற இருந்த கடைசி நேரத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. சக்திவேலின் மறைவால் அதிர்ச்சியடைந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, "நான் சீக்கிரம் செத்துவிடுவேன், உன்னை விஜய் கட்சியினர் பார்த்துக் கொள்வார்கள்" என்று தனது மகன் கூறியதாகச் சொல்லி கோவிந்தம்மாள் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இதுகுறித்து மாநகர செயலாளர் மதன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்பதற்காக வந்திருந்தோம். அப்போது இப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும், இந்த தெருவில் இருவர் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தான் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் தலைவர் இருவரின் உத்தரவின் பெயரில் இவர்களுக்கு உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் தென்னரசு கூறுகையில், இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தலைமை நிலையத்தில் ஒப்புதல் உடன், இந்த குடும்பத்தை தமிழக வெற்றிக் கழகம் இரண்டு மாதங்களாக தத்தெடுத்து கவனித்து வருவதாகவும், தற்போது சக்திவேலை இழந்த கோவிந்தம்மாளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















