மழையிலும் சபாஷ் போட வைத்த காஞ்சிபுரம்.. இந்த மாதிரி தான் இருக்கணும் பாராட்டி தீர்க்கும் மக்கள்
குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வடமாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தமிழக அரசு இயந்திரம் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஆண்டை போல மீண்டும் பாதிக்கப்படுவோமோ என சென்னை வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் தான், சென்னைக்கான கனமழை மெல்ல நகர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டி வருகிறது.
ரெட் அலெர்ட்
முன்னதாக தமிழ்நாட்டின் நான்கு வடக்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த ரெட் அலெர்ட் ஆனது ஆந்திராவின் தெற்கு மாவட்டங்களான திருப்பதி, சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு முதல் அதிகனமழை பொழியலாம் எனவும், ஒரே நாளில் 20 செ.மீ., மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் மழை
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், தூங்குவார்சத்திரம், மாங்காடு மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கை
இது போன்ற பேரிடர் காலங்களில் கர்ப்பிணி பெண்கள் தங்களது மருத்துவ தேவைக்கு உடனடியாக செல்லும் நிலையில் ஏதேனும் குறுக்கீடுகள் இருப்பதை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கண்காணிப்பின் கீழ் தற்போது இம்மாதத்தில் பிரசவிக்க உள்ள கர்ப்பிணிகள் 601 நபர்கள் உள்ளனர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரசவித்து உள்ளனர்.
இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசித்த ஐந்து கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். இவர்களை மாவட்ட வெள்ள தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவர்களது குடும்பம் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கர்ப்பிணி பெண் விமலா என்பவர் கூறுகையில், எங்கள் ஊர் அருகே செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. செம்பரம்பாக்கத்தில் கடந்தாண்டு பெய்த கன மழை காரணமாக, அதிகளவு பாதிப்படைந்தோம். இந்தநிலையில் , தற்போது நான் கர்ப்பிணியாக இருந்து வருகிறேன். இந்த நிலையில் இன்னும் நான்கு நாட்களில் எனக்கு, பிரசவம் நடக்க உள்ளது. மழைநீர் தேங்கும் பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் இருந்து போன் செய்து உடனடியாக, துணை சுகாதார மையத்தில் சேர்ந்து விடுமாறு கூறினார்கள். அதற்கான உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதாக தெரிவித்தார்.