காஞ்சிபுரம் கோயில் கோபுரத்தில் இருந்து வந்த சத்தம்... போதை ஆசாமியால் அலறிய மக்கள்
Kanchipuram News: புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் இராஜ கோபுரத்தின் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியை அலேக்காக தூக்கி பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை வீரர்கள்
புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணியான ராஜகோபுரம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து வந்த சத்தம்
இந்தநிலையில் திருக்கோவிலின் நடை சாற்றப்படும்போது 192அடி உயரமான ராஜகோபுரத்திலிருந்து உளறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனை அறிந்த பக்தர்கள் உடனடியாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்து பார்த்தபோது கோபுரத்திலிருந்தவாறு மது போதையில் ஒருவர் உளறியபடி இருந்தது தெரிய வந்தது.
தலைக்கு ஏறிய போதை
இதனையடுத்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் ராஜகோபுரத்தில் மீது ஏறி அங்கு போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த போதை ஆசாமியை பத்திரமாக வைத்து இறக்கினர்.
இதனையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேல் ஒட்டி வாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் போதையில் செய்வதறியாது கோவில் கோபுரத்தில் மீது ஏறியதும் அவர் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள 16கால் மண்டபம் பகுதியில் தங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் மது போதை ஆசாமி ராஜகோபுரத்தின் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்ட சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சற்று பரபரப்புடன் காணப்பட்டது. ராஜகோபுரம் மீது யாராவது அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனவே ராஜகோபுரம் வேலை முடியும் வரை ராஜகோபுரத்தின் மீது யாரும் ஏறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் கோவில் ராஜகோபுரத்தின் மீது ஏறி பார்த்தபோது போதை ஆசாமி உளறிக் கொண்டிருப்பது பெரிய வந்தது. இதனை அடுத்து அவரை பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்