வாசலில் விளையாடிய குழந்தை.. ஓடி வந்த தாய்.. கடித்துக் குதறிய நாய்
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் இரண்டு வயது குழந்தையை கடித்த தெருநாய்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு அருகே நாய்க்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ் சுவேதா தம்பதியரின் பவிஷ் என்ற 2 வயது குழந்தையை தெரு நாய்கள் கடித்ததில், பலத்த காயமடைந்த குழந்தைக்கு வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் சம்பவங்கள்..
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்திருப்பதால், தொடர்ந்து தெருநாய்களால் தாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடிப்பதால் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் மற்றொரு சம்பவமாக, தெரு நாய் கடித்ததில் இரண்டு வயது குழந்தை பாதிப்படைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்..
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நாய்க்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் - சுவேதா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் பவிஷ் என்ற குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை குழந்தை பவிஷ் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாக கூறப்படுகின்றது. அப்போது அந்தபகுதியில் சுற்றி திரிந்த ஐந்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் குழந்தை பவிஷ் விளையாடி கொண்டிருந்ததை கண்ட தெரு நாய்கள் குழந்தை பவிஷ் கடித்துத் குதறி உள்ளது.
சிகிச்சையில் குழந்தை...
தெரு நாய்கள் கடித்ததில் தாடை தோல் பகுதியில் பலத்த காயமடைந்த குழந்தை பவிஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை பவிஷ்க்கு உரிய மேல் சிகிச்சை அளிக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கடித்ததில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்பொழுது 2 வயது குழந்தை தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உரிய நடவடிக்கை தேவை..
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திடீரென நாய்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதும், இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்படைவதும் தொடர்கதை ஆகியுள்ளது. எனவே நாய்கள் பெருகுவதை தடுக்க உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.