காஞ்சிபுரம் அரசு பள்ளியில் அதிர்ச்சி... 6 மாதத்தில் பெயர்ந்து விழுந்த சீலிங்.. நடந்தது என்ன ?
நல்வாய்ப்பாக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர் என பீதியுடன் பள்ளியில் வேலை செய்யும் செக்யூரிட்டி ஒருவர் அச்சத்துடன் கூறினார்
காஞ்சிபுரம் அருகே புதியதாக கட்டப்பட்டு மூன்றே மாதங்களான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை சீலிங் இடிந்து விழுந்தது. மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் , வெளியில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மூன்றே மாதங்கள் ஆன கட்டிடத்தின் உறுதி தன்மையை மாவட்ட ஆட்சியர் உடனே ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.
குருவிமலை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என மூன்று கட்டிடங்கள் கட்டப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தான் இந்தக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.
சுமார் 90 மாணவ மாணவிகள் படிக்கின்ற இந்த நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடத்தில் குறிப்பாக ஏழாம் வகுப்பு வகுப்பறையில் மேலே உள்ள சீலிங் திடீரென உடைந்து கீழே விழுந்தது, ஓடிக்கொண்டிருந்த ஃபேனின் இறக்கை வளைந்தது. இதிலிருந்தே எந்த வேகத்தில் சீலிங் கற்கள் கீழே விழுந்திருக்கும் என்பதை எங்களால் உணர முடிகின்றது என மாணவ மாணவிகள் கூறினர்.
சீலிங் இடிந்தது
வகுப்பறையின் சீலிங் இடிந்து விழுவதற்கு முன்னதாக தான் அனைத்து மாணவ மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு இறைவணக்கம் செலுத்துவதற்காக அனைவரும் மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர். நல்வாய்ப்பாக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர் என பீதியுடன் பள்ளியில் வேலை செய்யும் செக்யூரிட்டி ஒருவர் அச்சத்துடன் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த வகுப்பறையின் கட்டிடத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து , தரமற்ற முறையில் இந்த கட்டடம் கட்டப்பட்டிருந்தால் இடித்து தள்ளிவிட்டு , தரமான முறையில் புதிய கட்டிடத்தை கட்டித் தரவேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.