ஆக்சிஜன் குறித்து ட்விட்டரில் தவறான தகவல்; வழக்குப்பதிவு செய்த உபி போலீஸ்
உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக தவறான தகவலை ட்விட்டரில் பதிவிட்டதாக இளைஞர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக தவறான தகவலை ட்விட்டரில் பதிவிட்டதாக இளைஞர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபியின் அமேதி போலீசார் ஷாசாங் யாதவ் என்ற 26 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இளைஞர் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் ஆக்சிஜன் சப்ளை தொடர்பான தவறான தகவலை பதிவிட்டு பரப்பியுள்ளார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அந்த இளைஞர் மீது நோய் பரப்புதல், மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிராக குற்றமிழைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள காவல் துணை ஆய்வாளர் விரேந்திர சிங், 'கைது செய்யப்பட்டவர், தன்னுடைய ட்விட்டர் மூலம் அரசுக்கு எதிராக தவறான தகவலை பரப்பியது விசாரணையில் தெரியவந்தது. இன்னும் சிலரும் தவறான தகவலை பரப்புகின்றனர்' என்றார். இந்த வழக்கில் தற்போது ஷாசாங் பகிர்ந்த தகவல் குறித்தும், விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் ஷாசாங் தவிர வேறு யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.