(Source: Poll of Polls)
நடித்து கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்த இளைஞர்.. திடீர் மரணத்தால் மக்கள் அதிர்ச்சி
கர்நாடகாவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோதே, இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர், பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டுகிறது. முறையான வாழ்க்கைமுறையை பின்பற்றாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நடித்து கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்த இளைஞர்:
இந்த நிலையில், கர்நாடகாவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோதே, இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே, அந்த இளைஞர் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டம் டிகோடா தாலுக்காவின் கோட்யா கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கோட்யா கிராமத்தில் முக்தகரா கோயில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடகத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த ஷரனு பாகல்கோட் என்பவர் (28) மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஷரனுவின் திடீர் மரணம் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியுள்ளது.
திடீர் மரணங்களுக்கு காரணம் என்ன?
இந்த திடீர் இறப்புகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உச்சப்பட்ச அமைப்புதான் ஐ.சி.எம்.ஆர். அதன் இயக்குநர் ராஜீவ் பால், இதுகுறித்து கூறுகையில், "எந்த காரணமும் இல்லாமல் திடீரென ஏற்படும் மரணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
கொரோனாவின் பின்விளைவுகள் ஏதேனும் இருந்தால், அதைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, மற்ற இறப்புகளைத் தடுக்கவும் இந்த ஆய்வுகள் உதவும்" என்றார். எந்த ஒரு நோயும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு இளைஞர் எதிர்பாராத மரணம் அடைவதே திடீர் மரணம் என ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இளைஞர்களின் திடீர் மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) 50 பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில், மேலும் 100 பிரேதப் பரிசோதனையை ஆய்வுக்கு உட்படுத்த ஐ.சி.எம்.ஆர் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வரிவாக பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ராஜீவ் பால், "இந்த பிரேத பரிசோதனைகளின் முடிவுகளை முந்தைய ஆண்டுகள் அல்லது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு, இறப்புக்கான காரணங்கள் அல்லது வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்" என்றார்.