idukki dam: இடுக்கி அணையை இனி நடந்தே ரசிக்கலாம்! கட்டுப்பாடுகள் நீக்கம், நுழைவுச்சீட்டு, இதோ முழு விவரம்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாபயணி ஒருவர் இடுக்கி அணை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அணையின் மதகுகளில் உள்ள இரும்பு சங்கிலிகளில் ஆசிட் ஊற்றினார்.

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டம் கேரளத்தின் மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. இது கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும் ஏறத்தாழ 20%. தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலா வட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி ஏறத்தாழ 50% காடுகளும் மலைகளுமே. மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை மாவட்டத்தின் இரண்டு உத்தியோகபூர்வ நிர்வாக மொழிகள். இடுக்கி மாவட்டத்தில் மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அதிகமாக பேசப்படும் மொழியாகும்.குறிப்பாக இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ள போதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.
குறிப்பாக இடுக்கி அணையை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் ஓணம், தீபாவளி, விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் இந்த அணைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது கிடையாது. மேலும், அணையை பார்வையிட அனுமதிக்கப்படும் நாட்களில் கூட அணையின் ஷட்டர்கள் திறக்கப்படும் போதும், சிவப்பு அல்லது ஆரஞ்சு மழை எச்சரிக்கைகளின் போதும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாட்களிலும் அணையை பார்வையிட தடை செய்யப்படும். கேரள நீர்பாசன துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி அணையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் மொபைல் போன், கேமராக்கள் அல்லது வேறு மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை சிறப்பு ஏற்பாடாக வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை இடுக்கி அணையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அணைப்பகுதியில் நடந்து சென்று பார்வையிட அனுமதி கிடையாது. அங்கு இயக்கப்படும் பேட்டரி வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாபயணி ஒருவர் அணை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அணையின் மதகுகளில் உள்ள இரும்பு சங்கிலிகளில் ஆசிட் ஊற்றினார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது இடுக்கி அணையை பார்வையிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கேரள நீர்ப்பாசன துறை நீக்கியுள்ளது. இனி அணையை நடந்து சென்றே சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம். தினமும் 3,750 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. https://www.keralahydeltourism.com/ என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்களை ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளலாம். அணையை பார்வையிட செல்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அணையை நடந்து சென்று பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.





















