Year Ender 2024 Politics: ஃபையர் பாலிடிக்ஸ்..! இந்தியாவில் அரங்கேறிய டாப் 10 அரசியல் சம்பவங்கள் - ஷாக் மோடி, ராக் ராகுல்
Year Ender 2024 Politics: நடப்பாண்டு இறுதியை நெருங்கும் நிலையில், 2024ல் இந்தியாவில் அரங்கேறிய 10 முக்கிய அரசியல் சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Year Ender 2024: நடப்பாண்டு இறுதியை நெருங்கும் நிலையில், 2024ல் இந்தியாவில் அரங்கேறிய 10 முக்கிய அரசியல் சம்பவங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
முடிவை நெருங்கும் 2024:
2024ஆம் ஆண்டு தனக்கான இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்க, 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் நோக்கில் நம்மை நோக்கி வந்துகொண்டுள்ளது. நடப்பாண்டு கலவையான நினைவுகளை விட்டுச் செல்லவிருக்கும் நிலையில், அதில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கலாம். இந்திய அரசியல் நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல முக்கிய மாநில தேர்தல்கள் நடைபெற்றன. இவை இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைத்தது மற்றும் அரசியலைப் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்:
1. மக்களவைத் தேர்தல் 2024: நடப்பாண்டில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல், இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆளும் கூட்டணியால், 400 தொகுதிகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையை இழந்து, மோடி தலைமையில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்தது. மறுபுறம், கடந்த முறை வெறும் 52 இடங்களை கைப்பற்றிட்ய காங்கிரஸ் இம்முறை 99 இடங்களுக்கு முன்னேறியது.
2. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வல்லுனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, பாஜக 132 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்சிபி முறையே 57 இடங்களையும், 41 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த கூட்டணி மொத்தம் 46 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
3. ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024 ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு (NC) கட்சி 42 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 29 இடங்களை வென்ற நிலையில், மெகபூபா முஃபித்தின் பிடிபி 3 இடங்களில் மட்டுமே வென்றது.
4. ஹரியானா தேர்தல்: கடுமையான ஆட்சி எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளையும் மீறி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.சரியான நேரத்தில் முதலமைச்சர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பாஜகவிற்கு பலனளித்ததாக கூறப்படுகிறது.
5. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், திடீர் நடவடிக்கையாக செப்டம்பர் 17-ஆம் தேதி பதவி விலகினார். தனது கட்சியை சேர்ந்த அமைச்சர் அதிஷியை பதவியேற்க வழி வகுத்தார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லி மக்கள் தனக்கு க்ளீன் சிட் கொடுத்த பிறகு பதவி ஏற்பேன் என்று சபதம் செய்தார்.
6. சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு 2024 ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. ஜனவரி மாதம் நில மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், ஜாமீனில் வெளியே வந்த அவர் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சியான பாஜகவை தோற்கடித்தார். 2024 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 34 இடங்களை வென்றதால் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சரானார்.
7. மணிப்பூர் பிரச்னை: மே 2023 இல் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையேயான மோதல்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட இன வன்முறை, 2024-லும் தீர்க்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டும் அந்த வடகிழக்கு மாநிலத்தின் நிலைமையை மோசமாக்கும் பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. தேசிய அளவில் இது பெரும் பேசுபொருளானது.
8. தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தி: நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரான பிரியங்கா காந்தி வத்ரா வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 64.99% வாக்குகளைப் பெற்று, தனது முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றார்.
9. ராகுல் காந்திக்கு வாய்ப்பளித்த உத்தரபிரதேசம்: 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் வெற்றியை பதிவு செய்தார். காந்தி குடும்ப கோட்டையாக இருந்த ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்து, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
10. நவீன் பட்நாயக்கின் தோல்வி: ஒடிசாவின் முகமாக இருந்த முதலமைச்சர் நவீன் பட்நாயக், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார். பட்நாயக் பாஜகவின் கைகளில் எதிர்பாராத தோல்வியைப் பெற்றார். ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி 51 இடங்களை மட்டுமே கைப்பற்ற, பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.