மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
இலங்கை அதிபர் திசநாயக இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக திகழ்வது இலங்கை. இந்தியாவின் அண்டை நாடு என்பதை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிக மிக அருகில் உள்ள நாடு என்றே கூறலாம். ராமேஸ்வரத்தில் இருந்து மிக மிக அருகில் உள்ளது. அதேபோல, நாகப்பட்டினத்தில் இருந்தும் 4 மணி நேரத்தில் இலங்கை செல்ல படகும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் உள்ளனர்.
தமிழக மீனவர்கள் விவகாரம்:
இலங்கை இந்தியாவின் அண்டை நாடாக இருந்தாலும், இந்தியாவுடன் சுமூகமான உறவை கொண்டிருந்தாலும் தமிழ்நாடு மீனவர்களை எதிரிகளைப் போலவே இலங்கை கடற்படையினர் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் என்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
கச்சத்தீவு இலங்கையின் வசம் முழுமையான பிறகு தமிழக மீனவர்கள் நடத்தப்படும் தாக்குதல் என்பது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அமையும் அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுகளை வலியுறுத்தினாலும், மத்தியில் அமைந்த காங்கிரஸ், பா.ஜ.க. என எந்த அரசும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை.
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்:
இந்த நிலையில், இலங்கை நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற அனுரகுமார திசநாயகே நேற்று இந்தியா வந்தார். அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சூழலில், இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்துள்ளார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி – இலங்கை அதிபர் திசநாயகே பேச்சுவார்த்தையின் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
நிரந்தர தீர்வு எப்போது?
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது சமீபகாலமாக குறைந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்வதும் குறைந்தபாடில்லை. மேலும், புதியதாக பொறுப்பேற்ற திசநாயகே அவர்களது எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான நாடாக உள்ளது. இந்தியாவுடன் பனிப்போரில் ஈடுபட்டு வரும் சீனா சமீபகாலாமாக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகிறது. இலங்கையின் துறைமுகங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறு கொண்டு வந்தால் அது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
முற்றுப்புள்ளி வைப்பாரா மோடி?
மேலும், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு லட்சக்கணக்கான கோடிகள் கொடுத்தும் சீனா உதவியதன் அடிப்படை நோக்கமும் அதுவே என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்தனர்.
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் நாடாக இந்தியா வந்துள்ள திசநாயகேவுடன், பூகோள அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றே எதிர்பார்க்கலாம். அதேபோல, சுமார் அரை நூற்றாண்டுகளாக தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுமட்டுமின்றி இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வாதாரம், அவர்களின் சம உரிமையை நிலைநிறுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் திசநாயகேவைச் சந்திப்பதற்காக தமிழக எம்.பி.யான காங்கிரஸ் உறுப்பினர் சுதா நேரம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.