Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீருக்கும், கதறலுக்கும் காரணமான பிரிஜ்பூஷன்சிங்..! யார் இந்த பா.ஜ.க. எம்.பி.?
கடந்த 1980களில் மோட்டார் சைக்கிளை திருடியது, சட்ட விரோத மது கடைகளை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக கோண்டா மாவட்ட மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
"கடந்த காலத்தில், நான் ஒரு கொலை செய்தேன். மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் ஒரு கொலை செய்தது உண்மை" என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்த பிறகும், வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிபவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்.
கொலையாளி பிரிஜ் பூஷன்:
விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு காரணமாக இருப்பவரும் இவர்தான். தான் கொலை செய்தேன் என வெளிப்படையாக பேசிய பிறகும் அவர் மீது இதுநாள் வரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையிலும், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிறகும், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷன் சிங் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? என தொடர் கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் செல்வாக்கு மிக்க பிரிஜ் பூஷன்:
மக்களவைக்கு ஆறு முறை தேர்வு செய்யப்பட்டவர் பாஜகவை சேர்ந்த பிரிஜ்பூஷன் சிங். கைசர்கஞ்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பிரிஜ் பூஷன், உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தையும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.
2022ஆம் ஆண்டு, செய்தி இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கும் வரை, அவர் கொலை செய்தது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூட, கொலை முயற்சி உள்பட நான்கு குற்ற வழக்குகளே தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டரா பாஜக எம்பி..?
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராகவும் இருந்து வருகிறார். சம்மேளனத்தை நடத்துவதில் அவர் தொடர்ந்து ஆள் பலத்தை பயன்படுத்தி வருதவதாக குற்றச்சாட்டு உள்ளது. அவரது மோசமான அணுகுமுறையின் விளைவாகவே, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட மல்யுத்த வீரர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது, தாக்கியது, இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் சர்வாதிகாரியாக நடந்து கொண்டது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 1980களில், மோட்டார் சைக்கிளை திருடியது, சட்ட விரோத மது கடைகளை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக கோண்டா மாவட்ட மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். கோயில் குளங்களின் அடியில் உள்ள நாணயங்களை சிறுவர்களை வைத்து திருடியதாகவும் பிரிஜ் பூஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுகிறது. முன்னாள் அமைச்சரை சுட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.